44 கோடி குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தயார் – 2 வாரங்களில் அறிவிப்பு வெளியாகிறது

இந்தியாவில் கொரோனா பரவல் கடந்த ஆண்டு தொடங்கிய நிலையில், இரண்டு அலைகளாக பரவியதால் பெரும் பாதிப்பையும், உயிரிழப்பையும் சந்திக்க நேர்ந்தது. கடந்த ஆண்டு இறுதியில் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகள் கொரோனாவுக்கு எதிரான போரில் நமக்கு கிடைத்த ஆயுதமாக மாறியிருக்கிறது. இதனையடுத்து இந்த ஆண்டு ஜனவரி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை மத்திய அரசு தொடங்கியது.

முதலில் சுகாதார மற்றும் முன்கள பணியாளர்களுக்கும், பின்னர் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், அடுத்ததாக 45 முதல் 60 வயது பிரிவினருக்கும், பின்னர் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் என ஒவ்வொரு கட்டமாக தடுப்பூசி போடும் பணிகள் விரிவாக்கம் செய்யப்பட்டு இன்று 100 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை செலுத்தி உலக அரங்கில் இந்தியா சாதித்துள்ளது.

18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்படாமல் இருந்து வந்தது. இதனிடையே ஓமிக்ரான் என்ற புதிய உருமாறிய ஆபத்தான கொரோனா வேரியண்ட் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ஏற்கனவே தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் கூட புதிய வேரியண்ட் ஆபத்தை ஏற்படுத்தலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில் தடுப்பூசி செலுத்ததாத குழந்தைகளை எந்த அளவுக்கு ஓமிக்ரான் வேரியண்ட் பாதிக்கும் என்பது மேலும் அச்சத்தை தருவதாக உள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் ஓமிக்ரான் வகை கொரோனாவை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதில் ஒரு அங்கமாக குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை தொடங்க இருப்பதாக
மருத்துவர் என்.கே.அரோரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மருத்துவர் என்.கே.அரோரா தெரிவித்திருப்பதாவது, “குழந்தைகளே நமது முக்கியமான சொத்து என நான் அடிக்கடி கூறிவருகிறேன். அதன்படி இந்தியாவில் 18 வயதிற்கு கீழ் உள்ள 44 கோடிக்கும் அதிகமான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் விரிவான திட்டத்தை தயாரித்திருக்கிறோம். ZyCoV-D , Covaxin, Corbevax மற்றும் mRNA வேக்சின்கள் தற்போது குழந்தைகளுக்கு செலுத்த போதிய அளவில் நம்மிடம் உள்ளது. ஆரோக்கியமற்ற மற்றும் இணை நோய்கள் கொண்ட குழந்தைகளுக்கு முன்னுரிமை கொடுத்து அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தும் விரிவான திட்டம் அடுத்த இரண்டு வாரங்களில் அறிவிக்கப்படும்.

பூஸ்டர் மற்றும் கூடுதல் தடுப்பூசி செலுத்துவது குறித்து நோய்த் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (NTAGI) ஒரு திட்டத்தை தயாரித்துள்ளது. இதுவும் விரைவில் அறிவிக்கப்படும். இதில் யாருக்கு தடுப்பூசி தேவை, யாருக்கு தேவைப்படாது என வரையறுக்கப்படும். பூஸ்டர் மற்றும் கூடுதல் தடுப்பூசிகளுக்கு இடையே வேறுபாடு உள்ளது. உடலில் நோயெதிர்ப்பு சக்தி போதிய அளவில் உருவாகதவர்களுக்கு தான் கூடுதல் தடுப்பூசி தேவைப்படும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.