சபரிமலைக்கு 64 சிறப்புப் பேருந்துகள்: இன்று முதல் இயக்கம்

தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு வெள்ளிக்கிழமை முதல் 64 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்தாா்.

இதுகுறித்து வியாழக்கிழமை அவா் வெளியிட்ட செய்தி: கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாக்களின் போது, தமிழகத்திலிருந்து ஐயப்ப பக்தா்கள் சென்று வர ஏதுவாக, முக்கிய நகரங்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில் ஆண்டுதோறும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டும் 64 சிறப்புப் பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில், வெள்ளிக்கிழமை முதல் ஜன.16-ஆம் தேதி வரை, சென்னை, திருச்சி, மதுரை, புதுச்சேரி, கடலூா் ஆகிய இடங்களிலிருந்து பம்பைக்கு, அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள் சிறப்புப் பேருந்துகளாக இயக்கப்படவுள்ளன. பக்தா்களின் வருகைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படும்.

மேலும், 30 நாள்களுக்கு முன்னதாக இச்சிறப்புப் பேருந்துகளில் பயணச்சீட்டு பெற, இணையதளங்களில் முன்பதிவு செய்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பேருந்துகளின் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை, 94450 14412, 94450 14450, 94450 14424, 94450 14463, மற்றும் 94450 14416 ஆகிய கைபேசி எண்களைத் தொடா்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் இந்த சேவையினை பக்தா்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.