ஹெலிகாப்டர் விபத்து.. மோசமான வானிலையே காரணமா?.. நடந்தது என்ன?

குன்னூர்: மோசமான வானிலையே நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. எனினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு செல்ல முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட அதிகாரிகள் கோவைக்கு வந்தனர். சூலூரிலிருந்து எம்ஐ ரக விமானத்தில் சென்றனர்.

அப்போது வெலிங்கடன் பயிற்சி மைய ஹெலிபேடை நெருங்க 10 கி.மீ. தூரம் இருந்த நிலையில் காட்டேரி எனும் அடர்ந்த காட்டு பகுதி அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் தற்போது வரை 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்கள்.

டெல்லியிலிருந்து சூலூர் வந்த விமானத்தில் 9 பேர் பயணம் செய்துள்ளனர். பின்னர் சூலூரிலிருந்து மேலும் சில அதிகாரிகள் இந்த எம்ஐ ரக ஹெலிகாப்டரில் பயணம் செய்ததாக சொல்லப்படுகிறது. இந்த விபத்து நடந்து ஒரு மணி நேரமாக யாருக்கும் தெரியவில்லை. பின்னர்தான் அங்குள்ள தோட்ட தொழிலாளர்களுக்கு தெரிந்து அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து முடிந்தவரை மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

அதற்குள் தகவலறிந்த தீயணைப்புத் துறையினரும் போலீஸாரும் உள்ளூர் ராணுவமும் அந்த இடத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டனர். இந்த விபத்து குன்னூர் அருகே காட்டேரி மலைப் பகுதியில் மஞ்சபா சத்திர்ம அருகே நடந்துள்ளது. அதாவது ஊட்டியிலிருந்து 25 கி.மீ. தூரம் உள்ளது. சரியாக இந்த விபத்து 11.20 மணிக்கு நடந்தது.

விமான பெட்ரோல் என்பதால் அது தொடர்ந்து வீரியமாக எரிந்தது. சுமார் 2.30 மணி நேரத்திற்கு பின்னர் தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். இந்த நிலையில் இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த பிபின் ராவத், அவரது மனைவி ஆகியோரின் நிலை என்ன என்பது தெரியவில்லை.

இந்த விபத்து ஏற்பட்டதற்கு காரணமாக மோசமான வானிலை என சொல்லப்படுகிறது. குன்னூரில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 20 டிகிரியாகவும் குறைந்தபட்சம் 12 டிகிரியாகவும் இருந்ததாக தெரிகிறது. கோவையிலிருந்து 10.30 மணிக்கு புறப்பட்ட இந்த ஹெலிகாப்டர் காட்டேரி மலைப்பாங்கான இடம் அருகே உள்ள தைல மரங்களில் மோதி விபத்துக்குள்ளானதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கிறார்கள். எனினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரவில்லை.

Leave A Reply

Your email address will not be published.