கைவிலங்கைப் பயன்படுத்தி கைவரிசை காட்டியவர் கைது.

சிறையிலிருந்து வெளியே வரும்போது திருடிக்கொண்டு வந்த கைவிலங்கைப் பயன்படுத்தி பொலிஸார் எனத் தெரிவித்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட நபர் ஒருவர், கிருலப்பனை பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 34 வயதுடைய ஓட்டோ சாரதி என்றும், இவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

பம்பலப்பிட்டி – சென்லாரன்ஸ் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றுக்குள் இருந்த நபரைப் பயமுறுத்தி, கைவிலங்கிட்டு அவரிடமிருந்து தங்க நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையிட்ட சந்தேகநபர், கிருலப்பனை – பூர்வாராம பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடம் 5 ஆயிரத்து 900 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஹெரோய்ன் விற்பனை தொடர்பில் சந்தேகநபர், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்து விடுதலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் அங்கிருந்து கைவிலங்கைத் திருடிக்கொண்டு வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் தொடர்பில் பம்பலப்பிட்டிப் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, சி.சி.ரி.வி. காட்சிகளைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமையவே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேலும், அவரிடமிருந்து ஒரு இலட்சத்து 10 ஆயிரம் ரூபா பணமும், 40 இலட்சம் ரூபா பெறுமதியான கார், கத்தி, கைவிலங்கு மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.