‘மொட்டு’வின் கொடூர ஆட்சியை விரைவில் விரட்டியடிப்பர் மக்கள்! சமன் ரத்னப்பிரிய சூளுரை.

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கொடூர ஆட்சியை நாட்டு மக்கள் விரட்டியடிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.”

– இவ்வாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

சுனாமி அனர்த்தத்தைப் போன்ற பேரழிவு, மொட்டு எனும் சுனாமியால் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சுனாமி நினைவு தினத்தை சில தினங்களுக்கு முன்னரே அனுஷ்டித்தோம்.

சுனாமி அனர்த்தம் என்பது நாட்டில் ஒரு நாள் ஏற்பட்ட பேரழிவாகும். புள்ளிவிவரத் தகவலின்படி சுனாமி அனர்த்தத்தால் நாட்டில் 38 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

அரை மணித்தியாலத்தில் பாரிய பேரழிவு நாட்டில் ஏற்பட்டது. இந்தப் பேரழிவு ஒவ்வொரு வருடமும் நினைவுகூரப்பட்டு வருகின்றது. அவ்வாறான ஒரு பேரழிவு நாட்டில் மீண்டும் ஏற்படக்கூடாது என்பதே எமது பிரார்த்தனை.

தற்போதைய நிலையில் சுனாமி பேரழிவைவிட பாரிய பேரழிவை ‘மொட்டு’க் கட்சி நாட்டில் ஏற்படுத்திக்கொண்டு இருக்கின்றது.

தேசிய பாதுகாப்பைப் பிரதானப்படுத்தி ஆட்சிக்கு வந்த ‘மொட்டு’ சுனாமி, இன்றைய நிலையில் நமது நாட்டை மூழ்கடித்துக்கொண்டும் சீரழித்துக்கொண்டும் உள்ளது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.