ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை : சேலம் உருக்காலை தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

சேலம் உருக்காலை தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தை முறையாக நடைபெறவில்லை எனவும், மீண்டும் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே துவங்க வேண்டும் என வலியுறுத்தியும், சேலம் உருக்காலையில் பணியாற்றும் சிஐடியு தொழிலாளர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய உருக்கு ஆணையைகத்தின் கீழ் இயங்கும் சேலம் உருக்காலை உள்ளிட்ட ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 2017 முதல் ஊதிய ஒப்பந்தம் ஏற்படவில்லை, இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதத்தில் ஐ.என்.டி.யு.சி, ஏ.ஐ.டி.யு.சி, எச்.எம்.எஸ், தொ.மு.ச உள்ளிட்ட சங்கங்களை சார்ந்த தொழிலாளர்களின் கோரிக்கைகள் முழுமையாக்கப்படாத ஊதிய ஒப்பந்தம் அக்டோபர், 22 அன்று கையொப்பமிடப்பட்டது. இதனை பெரும்பாலான தொழிலாளர்கள் ஏற்றுக்கொள்ளாத நிலையில், கண்டன ஆர்ப்பாட்டங்கள் இந்தியா முழுவதும் நடைபெற்றது.

குறிப்பாக தொழிலாளர் பணிக்கொடையில் (Gratuity) எதிர்பாராத மாற்றம் இருப்பதாகவும், 2017 ஆம் ஆண்டு முதல் வழங்க வேண்டிய நிலுவைத்தொகை முழுமையாக வழங்கப்படவில்லை எனவும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதிய ஒப்பந்தம் ஏற்படவில்லை எனவும், ஏற்கனவே வழக்கத்தில் உள்ள பல்வேறு சலுகைகள் (Subsidy) பறிக்கப்பட்டுள்ளது எனவும், புதிய ஊதிய அட்டவணை உருவாக்கப்படவில்லை எனவும், புதிய பதவி உயர்வுக்கான கிரேடுகள் ஏற்படுத்தப்படவில்லை எனவும் தொழிலாளர்கள் தரப்பில் கூறப்படுகின்றது.

மேற்கண்ட பிரதான கோரிக்கைகளை முன் வைத்து இந்திய உருக்குத் தொழிலாளர் சம்மேளனம் (சி.ஐ.டி.யு) ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்தது. அதன் படி (05.01.2022) அனைத்து உருக்காலைகளிலும் 3 பணி முறைகளிலும் (மூன்று ஷிப்ட்) வேலை நிறுத்தம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக சேலம் உருக்காலை நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தை முறையாக நடைபெறவில்லை எனவும் மீண்டும் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என வலியுறுத்தியும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதனால் சேலம் உருக்காலையில் சி.ஆர்.எம், எச்.ஆர்.எம், எஸ்.எம்.எஸ்,. உள்ளிட்ட உற்பத்தி பகுதிகளில் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதேபோல் சேலம் உருக்காலை முன்பாக சைல் நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட தலைவர் பி. பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். இதில் சிஐடியு சேலம் உருக்காலை தொழிற் சங்க பொது செயலாளர் கே. பி.சுரேஷ் குமார், பொருளாளர் பாலாஜி, துணைப் பொதுச் செயலாளர் ராஜேந்திரன், நிர்வாகிகள் சரவணன், சண்முகம், ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.