அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டது

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள் முகூர்த்தக்கால் நடப்பட்டு தொடங்கப்பட்டது. அதன்படி, வாடிவாசல் அருகேயுள்ள முத்தாலம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து முகூர்த்த கால் நடப்பட்டது.

தை பொங்கலை முன்னிட்டு வரும் 14ஆம் தேதி அவனியாபுரம், 15ஆம் தேதி பாலமேடு, 16ஆம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது குறித்து இன்று ஆலோசனை நடத்துகிறது.

இந்நிலையில், இன்று முதல் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாட்டு பணிகள் தொடங்கியுள்ளன. வாடிவாசலில் வர்ணம் தீட்டுவது, கேளரி அமைப்பது, காளைகளுக்கான மருத்துவ பரிசோதனை செய்யுமிடம், காளைகள் நிறுத்தி வைக்கும் இடத்தை தயார் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன.

காளை மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஜல்லிகட்டு போட்டி நடத்துவது தொடர்பாக தமிழக அரசிடம் இருந்து இதுவரை எந்தவொரு முடிவும் அறிவிக்கவிக்கப்படவில்லை.

வழக்கமாக முகூர்த்த கால் நடும் விழாவில் அமைச்சர், ஆட்சியர் பங்கேற்பார்கள், ஆனால் இந்த ஆண்டு அமைச்சர் ஆட்சியர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அரசு வழிகாட்டுதல் படி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்றும், பார்வையாளர்கள் இல்லாமல் நடத்தலாம் என அரசு சொன்னால் அதன்படி போட்டிகளை நடத்துவோம் எனவும் விழா கமிட்டி பிரதிநிதி ரகுபதி தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.