தடையை மீறி நடைபெற்ற வங்கா நரி ஜல்லிக்கட்டு : கிராம மக்களிடம் விசாரணை
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தடையை மீறி நடைபெற்ற வங்கா நரி ஜல்லிக்கட்டு போட்டியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், கிராம மக்களிடம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி, அருகேயுள்ள பெத்தநாயக்கன்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் பொங்கல் பண்டிகையை ஒட்டி வங்காநரி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருவது வழக்கம், இதற்காக கிராமமக்கள் பொங்கல் பண்டிகை முடிந்த அடுத்த நாள் அதாவது காணும் பொங்கல் நாளில் (கரிநாள்) வனப்பகுதிக்குள் சென்று வங்கா நரியை பிடித்து வருவார்கள்.
பின்னர் ஊரில் உள்ள கோயில் வளாகத்தில் வைத்து வழிபாடு நடத்திய பின்னர் வங்கா நரியை ஓட விட்டு ஜல்லிக்கட்டு நடத்துவார்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்த விழாவை நடத்துவதை கிராமமக்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில் நடப்பாண்டு வங்கா நரியை பிடித்து வந்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்தினால் 3 ஆண்டு முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் .என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தும் தடையை மீறி வாழப்பாடி அருகே கொட்டவாடி கிராமத்தில் வங்கா நரி ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
இதில் வங்கா நரியை வனப்பகுதியில் இருந்து பிடித்து வந்த கிராமமக்கள் மாரியம்மன் கோவிலை சுற்றி ஊர்வலமாக தூக்கி சென்று வழிபடும் வீடியோ சமூக வலைதலங்களில் வைரலானது.
இதுகுறித்து தகவல் அறிந்த வனசரகர் துரைமுருகன் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வங்கா நரி ஜல்லிக்கட்டு நடத்தியது குறித்து அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.