தமிழர் விவகாரம் உட்பட பல விடயங்கள் தொடர்பில் பஸில் – ஜெய்சங்கர் மீண்டும் பேச்சு!

இலங்கைத் தமிழர் விவகாரம் உட்பட பல விடயங்கள் தொடர்பில் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவுடன், இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் மீண்டும் பேச்சு நடத்தியுள்ளார். இலங்கையுடனான நல்லுறவு மேம்பாடு தொடர்பிலும் இந்திய வெளிவிவகார அமைச்சர் இந்தப் பேச்சுக்களின்போது கூடுதல் கவனம் செலுத்தியுள்ளார் எனவும் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவின் செயலாளர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச, இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் இந்திய நிதி அமைச்சர் ஆகியோரைச் சந்தித்திருந்தார். இந்தியப் பிரதமரை சந்திக்காமல் நாடு திரும்பியிருந்தார். இந்த மாத ஆரம்பத்தில் இந்தியப் பிரதமரைச் சந்திப்பதற்காக, நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இந்தியாவுக்குச் செல்வார் எனத் தெரிவிக்கப்பட்டது. கொரோனா உட்பட பல்வேறு காரணங்களால் அவரது இந்தியப் பயணம் ஒத்திவைக்கப்பட்டது. இந்தநிலையிலேயே இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருடன், நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச மெய்நிகர் வழியில் சந்திப்பை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது இரு தரப்பு உறவுகளின் மேம்பாடு தொடர்பில் பேசப்பட்டது. இந்தியாவின் பொருளாதார உதவிகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது. தமிழர்கள் உள்பட நாட்டின் அனைத்து இனக்குழுமம் தொடர்பிலும் பேசப்பட்டது. அரசியல் ரீதியான விடயங்கள், பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி தொடர்பிலும் ஆராயப்பட்டது.

இந்தப் பேச்சுக்களின்போது இந்திய மீனவர்களின் விடுதலை தொடர்பில் பேசப்பட்டது எனவும் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவின் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.