மல்வத்து பீடத்தின் “மாத்கமுவ விஹாரை”பிரதிஷ்டை செய்யப்பட்டது…

வரலாற்றுச் சிறப்புமிக்க மல்வத்து மஹா விஹாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட “மாத்கமுவ விஹாரை”, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இன்று (05) முற்பகல் மல்வத்து மஹா விஹாரைக்குச் சென்ற ஜனாதிபதி அவர்கள், மல்வத்து பீடத்தின் மஹா நாயக்கர் அதி வணக்கத்துக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரரைச் சந்தித்து, ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.

மல்வத்து மஹா விஹாரை வளாகத்தில் அமைந்துள்ள மாத்கமுவ விஹாரையின் பழைய கட்டிடம் முற்றாக அழிக்கப்பட்டு, ஜனாதிபதி அவர்களின் ஆலோசனைப்படி கடற்படையினரின் பங்களிப்பில், சுமார் ஒரு வருடக் காலப்பகுதியில் மூன்று மாடிக் கட்டிடமாக நிர்மாணிக்கப்பட்டது.
பாரம்பரிய முறைகளுக்கமைய இந்தப் புதிய கட்டிடம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, அதற்கான சன்னஸ் பத்திரம், மல்வத்து பீடத்தின் அனுநாயக்கர் அதி வணக்கத்துக்குரிய திம்புல்கும்புரே விமலதம்ம தேரரிடம் ஜனாதிபதி அவர்களினால் கையளிக்கப்பட்டது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உளுகேதென்ன அவர்கள், இக்கட்டிடத்துக்கான சாவியை, அநுநாயக்கத் தேரரிடம் கையளித்தார்.
மல்வத்து பீடத்தின் அனுநாயக்கர் அதி வணக்கத்துக்குரிய நியங்கொட விஜித்தசிறி தேரர் உள்ளிட்ட மஹா சங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து, ஜனாதிபதி அவர்களுக்கு ஆசீர்வாதமளித்தனர்.

அதன் பின்னர், அஸ்கிரிய மஹா விஹாரைக்குச் சென்ற ஜனாதிபதி அவர்கள், அஸ்கிரிய பீடத்தின் மஹா நாயக்கர் அதி வணக்கத்துக்குரிய வரக்காகொட ஸ்ரீ ஞானரத்தன தேரரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.

சப்ரகமுவா மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, புத்தசாசன அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, பொது அறங்காவலர் கணேஸ் தர்மவர்தன, கண்டி விஷ்ணு மஹா தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே மஹேன் ரத்வத்தே, பத்தினி மஹா தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே ஹேமந்த பண்டார ஹேரத் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.