நாட்டின் வீழ்ச்சிக்கு மஹிந்தவே காரணம்! – முன்னாள் எம்.பி. சுரேஷ் குற்றச்சாட்டு.

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்துக்குப் பின்னர்தான் நாட்டின் பொருளாதாரம் கேள்விக்குறியானது என ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டின் பொருளாதாரம் கொரோனா காரணமாக பாதாளத்தில் சென்று விட்டது எனச் சொல்கின்றார்கள். அது உண்மை இல்லை. மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின் பின்னர்தான் இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளது.

மத்தள விமான நிலையம் முதல், அம்பாந்தோட்டை துறைமுகம் வரை திட்டமிடப்படாத நிகழ்ச்சி நிரலின் கீழ் சென்றுவிட்டது. இப்படித்தான் ஆட்சியாளர்கள் செய்துவிட்டுச் செல்கின்றனர். அரசிடம் சரியான திட்டமிடல் இல்லை.

இப்போது மின்சாரம், எரிபொருள் எல்லாமே பிரச்சினையாக உள்ளது. பொருட்களின் விலையை வியாபாரிகளே நிர்ணயிக்கின்றனர். இதற்கு நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவே பதில் கூற வேண்டும். அடுத்த தேர்தல்தான் இதற்குப் பதில் கூற வேண்டும். பஸில் ராஜபக்ச பொருளாதாரக் கொள்கையை மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்க்க வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.