ஐபிஎல் மெகா ஏலம்: 2வது நாளாக இன்று பெங்களூருவில் நடைபெறுகிறது.

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் 2 நாள் ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று தொடங்கியது. ஏலப்பட்டியலில் முதலில் 590 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். கடைசி நாளில் 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்ெகட்டில் ஆடிய 10 வீரர்கள் சேர்க்கப்பட்டதால் இந்த எண்ணிக்ைக 600 ஆக உயர்ந்தது. இதில் 377 பேர் இந்தியர்கள் ஆவர். போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் தங்களிடம் இருந்த இருப்புத்தொகைக்கு ஏற்ப கணக்கு போட்டு வீரர்களை ஏலத்தில் ஆர்வமுடன் எடுத்தனர்.

எதிர்பார்க்கப்பட்டது போலவே இந்திய இளம் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன், வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர், மிடில் வரிசை பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் அய்யர், ஆல்-ரவுண்டர் ஷா்துல் தாக்குர் ஆகியோருக்கு கடும் கிராக்கி காணப்பட்டது.

2020-ம் ஆண்டு ஐ.பி.எல்.-ல் 30 சிக்சர் நொறுக்கியவரான இஷான் கிஷனை எடுக்க மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் ைடட்டன்ஸ் அணிகள் வரிந்து கட்டின. ரூ.2 கோடியில் இருந்து அவரது விலை கிடுகிடுவென எகிறியது. ரூ.13 கோடியை நெருங்கியதும் குஜராத் பின்வாங்கியது. அதன் பிறகு அதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஐதராபாத் சன் ரைசர்ஸ் தடாலடியாக கோதாவில் குதித்தது. கடந்த ஆண்டு தங்கள் அணிக்காக ஆடிய அவரை விட்டுவிடக்கூடாது என்பதில் மும்பை தரப்பு உறுதியுடன் இருந்தது. ஐதராபாத் ரூ.15 ேகாடி வரை முட்டிமோதிப் பார்த்தது. இறுதியில் ரூ.15¼ கோடிக்கு இஷான் கிஷனை மும்பை இந்தியன்ஸ் பெற்றது.

ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன இந்திய வீரராக யுவராஜ்சிங் (ரூ.16 கோடி, டெல்லி அணி, 2015-ம் ஆண்டு) திகழ்கிறார். அவருக்கு அடுத்த இடத்தை இஷான் கிஷன் இப்போது பிடித்துள்ளார்.

புதிய பந்தில் ஸ்விங் செய்வதில் வல்லவரான வேகப்பந்து வீச்சாளரும், கடைசி கட்டத்தில் அதிரடியாக பேட்டிங் செய்யும் திறன் படைத்தவருமான தீபக் சாஹரின் தொடக்க விலை ரூ.2 கோடியாகும். டெல்லியும், ஐதராபாத்தும் அவரது விலையை ராக்கெட் வேகத்தில் நகர்த்தின. ரூ.11 கோடி வந்ததும் களத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் நுழைந்தது. ரூ.13 கோடியை தொட்டதும் ராஜஸ்தான் ராயல்சும் ஏலஅட்டையை தூக்கிப்பிடித்தது. ஒரு வழியாக ரூ.14 கோடிக்கு தீபக் சாஹரை சென்னை அணி எடுத்து நிம்மதிப் பெருமூச்சு விட்டது. இதன் மூலம் சில ஆண்டுகளாக சென்னை அணிக்காக விளையாடி வரும் தீபக் சாஹா் மீண்டும் சென்னை அணியில் ஐக்கியமாகியுள்ளார்.

இதே போல் ரூ.2 கோடி அடிப்படை விலையாக கொண்ட ஸ்ரேயாஸ் அய்யரை இழுக்க 5 அணிகள் மல்லுக்கட்டின. அவரது மதிப்பு ரூ.10 கோடியைத் தாண்டியதும் குஜராத் டைட்டன்சும், கொல்கத்தா நைட் ரைடர்சும் நேருக்கு நேர் மோதின. இறுதியில் ரூ.12¼ கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஸ்ரேயாஸ் அய்யரை வாங்கியது.

ஸ்ரேயாஸ் அய்யர் 2015-ம் ஆண்டில் இருந்து டெல்லி அணிக்காக விளையாடி வந்தார். தனது 2-வது ஐ.பி.எல். அணியாக இப்போது கொல்கத்தாவுடன் பயணத்தை தொடங்கும் அவருக்கு கேப்டன் பதவி வழங்கப்படும் என்று தெரிகிறது.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் பெங்களூரு ராயல் சேலஞ்சா்ஸ் அணிக்காக விளையாடி கடந்த ஐ.பி.எல்.-ல் அதிக விக்கெட் வீழ்த்தி (32 விக்ெகட்) ஊதாநிற தொப்பியை பெற்றவர் ஆவார். ஆனால் அவரை தக்கவைக்காமல் விடுவித்த பெங்களூரு நிர்வாகம் மீண்டும் தங்கள் அணிக்கு கொண்டு வர விரும்பியது. அவரை வாங்க ஐதராபாத் சன்ரைசர்சும் முண்டியடித்ததால் ெதாடக்க விலையான ரூ.2 கோடியில் இருந்து இறக்கை கட்டிப் பறந்தது. கடைசியில் ரூ.10¾ கோடிக்கு பெங்களூரு அணி ெவற்றிகரமாக அவரை வாங்கியது. முன்னதாக சென்னை சூப்பர் கிங்சும் அவரை எடுக்க ஆர்வம் காட்டியது. ரூ.4.2 கோடிக்கு பிறகு முயற்சியை கைவிட்டது.

ஏலத்தில் கவனத்தை ஈர்த்த இன்னொரு இந்திய வீரர் ஷர்துல் தாக்குர். ஆல்-ரவுண்டராக உருவெடுத்துள்ள அவரது ஆரம்ப விலை ரூ.2 கோடியாகும். இவருக்கும் இந்த முறை பண மழைதான். சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி, பஞ்சாப், குஜராத் ஆகிய 4 முனை போட்டியில் டெல்லிக்கு வெற்றி கிட்டியது. ரூ.10¾ ேகாடி ஊதியத்தில் இந்த சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக கால்பதிப்பார்.

கணிப்புப்படியே, தமிழக அதிரடி ஆல்-ரவுண்டர் ஷாருக்கானும் பெரிய தொகைக்கு விலை போனார். அவரது ஆரம்ப விலை ரூ.40 லட்சம்தான். அவரை வசப்படுத்த சென்னையும், பஞ்சாப்பும் மும்முரம் காட்டின. ஒரு கட்டத்தில் சென்னை தயங்கியது. பஞ்சாப் ரூ.9 கோடிக்கு ஷாருக்கானை தனதாக்கியது. கடந்த சீசனிலும் அவர் பஞ்சாப் அணிக்காகத்தான் ஆடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்க விலையில் இருந்து 22 மடங்கு கூடுதல் தொகையை பெறும் ஷாருக்கான் சர்வதேச போட்டியில் ஆடாத வீரர் என்பது கவனிக்கத்தக்க அம்சமாகும்.

சமீபத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஆட்டநாயகன் விருது பெற்றவரான வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா (ரூ.10 கோடி, ராஜஸ்தான் ராயல்ஸ்), ஆல்-ரவுண்டர் ராகுல் திவேதியா (ரூ.9 கோடி, குஜராத் ), தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர் (ரூ.8¾ கோடி, ஐதராபாத்) மற்றும் ராகுல் திரிபாதி (ரூ.8½ ேகாடி, ஐதராபாத்), ஷிகர் தவான் (ரூ.8¼ கோடி, பஞ்சாப்), குருணல் பாண்ட்யா (ரூ.8¼ கோடி, லக்னோ), நிதிஷ் ராணா (ரூ.8 ேகாடி, கொல்கத்தா) தேவ்தத் படிக்கல் (ரூ.7¾ கோடி, ராஜஸ்தான்), ஆகிய இந்தியர்களின் விலையும் மில்லியன் டாலரை கடந்து வியப்பில் ஆழ்த்தின.

வெளிநாட்டு வீரர்களில் அதிகபட்சமாக இலங்கையின் சுழல் சூறாவளி ஹசரங்காவுக்கும், வெஸ்ட் இண்டீசின் அதிரடி விக்கெட் கீப்பர் நிகோலஸ் பூரனுக்கும் மெகா ஜாக்பாட் அடித்தது. ஹசரங்காவை பஞ்சாப் நிர்வாகம் தீவிரமாக குறி வைத்து ரூ.1 கோடியில் இருந்து ரேட்டை உயர்த்தி கொண்டே வந்தது. ஆனால் ரூ.10½ கோடியுடன் ஜகா வாங்கியதால் கடைசியில் ரூ.10¾ கோடிக்கு பெங்களூரு அணி ஒப்பந்தம் செய்தது.

நிகோலஸ் பூரனை தங்களது படையில் இணைக்க கொல்கத்தா போராடிய போதிலும் அவர்களின் முயற்சியை ஐதராபாத் முறியடித்து ரூ.10¾ கோடிக்கு சொந்தமாக்கியது.

ஆச்சரியமூட்டும் விலைக்குப் போன நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லோக்கி பெர்குசனை ரூ.10 கோடிக்கு குஜராத் ைடட்டன்சும், தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காஜிசோ ரபடாவை ரூ.9¼ கோடிக்கு பஞ்சாப் கிங்சும், வெஸ்ட் இண்டீஸ் ஆல்-ரவுண்டர் ஜாசன் ஹோல்டரை ரூ.8¾ கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்சும் வாங்கின.

இந்நிலையில் 2-வது நாளாக இன்றும் தொடர்ந்து ஏலம் நடைபெற உள்ளது.

சர்வதேச போட்டியில் ஆடாத அவேஷ்கான் ரூ.10 கோடிக்கு ஏலம்

ஐ.பி.எல். ஏலத்தில் வேகப்பந்து வீச்சாளர் அவேஷ்கானை ரூ.10 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி எடுத்தது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த 25 வயதான அவேஷ்கான் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்ட போதிலும் இன்னும் சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை. ஐ.பி.எல். வரலாற்றில் சர்வதேச போட்டியில் ஆடாத ஒரு வீரர் இவ்வளவு தொகைக்கு ஏலம் போனது இதுவே முதல்முறையாகும். அது மட்டுமின்றி சர்வதேச போட்டியில் ஆடாத வீரர்களான ஷாருக்கான் (ரூ.9 கோடி, பஞ்சாப்), ராகுல் திவேதியா (ரூ.9 கோடி, குஜராத்), ராகுல் திரிபாதி (ரூ.8½ கோடி, ஐதராபாத்) ஆகியோரும் கோடிகளில் புரள்கிறார்கள்.

விலை போகாத ஸ்டீவன் சுமித், சுரேஷ் ரெய்னா

ஐ.பி.எல். வீரர்கள் ஏலப்பட்டியலில் இடம் பிடித்து இருந்த ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித், இந்திய முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியவருமான சுரேஷ் ரெய்னா, ஷகிப் அல்-ஹசன் (வங்காளதேசம்), விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா (இந்தியா), வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் (இந்தியா), டேவிட் மில்லர், இம்ரான் தாஹிர் (இருவரும் தென்ஆப்பிரிக்கா), ஆடம் ஜம்பா (ஆஸ்திரேலியா) ஆகியோரை வாங்க அணிகள் ஆர்வம் காட்டும் என்று எதிர்பார்த்த நிலையில் நேற்று அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டு இருந்த ஸ்டீவன் சுமித், சுரேஷ் ரெய்னா ஆகியோரின் பெயரை ஏலம் விடுபவர் வாசித்த போது எல்லா அணிகளும் மவுனம் காத்தன. இதேபோல் குறிப்பிட்ட சில வீரர்களின் பெயர்கள் ஏலத்துக்கு வந்த போதும் அணி நிர்வாகத்தினர் வாய் திறக்கவில்லை. இதனால் சுரேஷ் ரெய்னா, ஸ்டீவன் சுமித் உள்ளிட்ட வீரர்கள் விலைபோகவில்லை. அணி நிர்வாகிகள் விரும்பினால் இன்று மீண்டும் ஒரு முறை அவர்களது பெயர் ஏலத்தில் எடுத்து கொள்ளப்படும்.

ஐ.பி.எல். ஏலம் சுவாரஸ்யங்கள்

* ஏலத்தில் முதல் வீரராக இந்திய வீரர் ஷிகர் தவானின் பெயர் வாசிக்கப்பட்டது. அவரை ரூ.8¼ கோடிக்கு பஞ்சாப் அணி தேர்வு செய்தது. இதுவரை இல்லாத நிகழ்வாக, 10 வீரர்கள் ரூ.10 கோடிக்கு மேல் ஏலம் போய் இருக்கிறார்கள்.

* குஜராத்தை சேர்ந்த 31 வயதான வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் 2021-ம் ஆண்டு ஏலத்துக்கு முன்பாக ரூ.20 லட்சத்துக்கு டெல்லி அணியில் இருந்து ெபங்களூரு அணிக்கு பரஸ்பரம் அடிப்படையில் மாற்றப்பட்டார். 2021-ம் ஆண்டு ஐ.பி.எல்.-ல் 32 விக்கெட் கைப்பற்றி கலக்கினார். அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு இறுதியில் இந்திய அணியில் அறிமுகம் ஆனதால் அவரது அடிப்படை விலை உயா்ந்தது. இப்ேபாது ஒரே நாளில் ேகாடீஸ்வரர் ஆகி விட்டார். ரூ.10¾ கோடிக்கு ெபங்களூரு அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

* 2019-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் பஞ்சாப் அணிக்காக ஆடிய போது, ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லரை (69 ரன்) மன்கட் முறையில் (எதிர்முனையில் நிற்கும் பேட்ஸ்மேன், பவுலர் பந்து வீசும் முன்பே கிரீசை விட்டு நகரும் போது ரன்-அவுட் செய்யப்படுவது) ரன்-அவுட் ஆக்கி சர்ச்சையை கிளப்பினார். வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் இது போல் ரன்-அவுட் செய்வேன், விதிமுறைப்படியே நான் நடந்து கொள்கிறேன் என்றும் கூறினார். அஸ்வினை தற்போது ரூ.5 கோடிக்கு ராஜஸ்தான் வாங்கியுள்ளது. அதே அணியில் தான் ஜோஸ் பட்லர் தக்கவைக்கப்பட்டிருப்பதால் மனக்கசப்பை மறந்து புதிய கூட்டணி உருவாகுகிறது.

* இஷான் கிஷன், தீபக் சாஹர் ஆகியோர் தங்களது முந்தைய அணிக்கே திரும்புகிறார்கள். இதில் வேடிக்கையான விஷயம் என்னவெனில், இஷான் கிஷனை மும்பை அணி தக்க வைத்திருந்தால் மிஞ்சிப்போனால் ரூ.8 கோடி கிடைத்திருக்கும். தீபக் சாஹரை சென்னை அணி வைத்திருந்தால் அவரும் இதே அளவு தொகை தான் பெற்றிருப்பார். அணியில் இருந்து விடுவிக்கப்பட்டு ஏலத்திற்கு வந்து மீண்டும் அதே அணிக்கு மிகப்பெரிய தொகையுடன் அடியெடுத்து வைக்கிறார்கள்.

* ஐதராபாத் அணி கழற்றி விட்ட டேவிட் வார்னரை (ஆஸ்திரேலியா) ரூ6¼ கோடிக்கு டெல்லி அணி வாங்கியது.

* நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட வீரர்களை எடுப்பதில் கூடுதல் கவனம் செலுத்தியது. வெய்ன் பிராவோ, அம்பத்தி ராயுடு, தீபக் சாஹர், கே.எம்.ஆசிப், உத்தப்பா ஆகியோர் 2021-ம் ஆண்டு சென்னை அணியில் இடம் பெற்றவர்கள் தான். அவர்களுக்கு மீண்டும் சென்னை அணியில் நீடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும், முந்தைய சீசனில் தங்கள் அணியில் ஆடிய பாப் டு பிளிஸ்சிஸ், ஹேசில்வுட், ஷர்துல் தாக்குரையும் ஏலத்தில் எடுக்க முயற்சித்து தோல்வியில் முடிந்தது.

* தமிழக வீரர்களில் அஸ்வின், தினேஷ் கார்த்திக், டி.நடராஜன்,ஷாருக்கான்,முருகன் அஸ்வின்,சாய் கிஷோர் ஆகியோர் முதல் நாளில் விலைக்கு போனார்கள்.

Leave A Reply

Your email address will not be published.