சர்வதேச தாய்மொழி தின நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு!

சர்வதேச தாய்மொழி தினம் (International Mother Language Day) பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் தலைமையில் இன்று (21) முற்பகல் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது.

ஆண்டுதோறும் பெப்ரவரி 21ஆம் திகதி கொண்டாடப்படும் சர்வதேச தாய்மொழி தினமானது அமைதியை நிலைநாட்டுதல், பன்மொழி பயன்பாட்டை மேம்படுத்துதல் மற்றும் உலகம் முழுவதும் தாய்மொழிகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயம், கல்வி அமைச்சு, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மற்றும் இலங்கை சாரணர் சங்கம் ஆகியன இணைந்து இவ்வருட சர்வதேச தாய்மொழி தினத்தை ஏற்பாடு செய்திருந்தன.

தாய்மொழியைப் பாதுகாப்பதற்காக உயிர் தியாகம் செய்தவர்களை நினைவுகூரும் வகையில், விழாவின் ஆரம்பத்தில் பிரதமர் உள்ளிட்ட அனைவரும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
‘தாய், தாய்மொழி, தாய்நாடு’ என்பது இந்த ஆண்டு கொண்டாட்டத்தின் தொனிப்பொருளாகும். இந்த மூன்று விலைமதிப்பற்ற சொத்துக்களை பாதுகாப்பதற்கான நமது முயற்சிகளை புதுப்பிப்போம் என்பதே இந்த ஆண்டு கொண்டாட்டத்தின் முக்கிய செய்தியாகும்.

சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு ‘தாய், தாய்மொழி, தாய்நாடு’ என்ற தொனிப்பொருளில் மூன்று தொகுதிகளாக நடத்தப்பட்ட கட்டுரை மற்றும் சித்திரப் போட்டிகளில் வெற்றி பெற்ற 15 வெற்றியாளர்களுக்கு இதன்போது பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. சித்திரப் போட்டியில் வெற்றி பெற்ற மூன்று மாணவர்களும் பிரதமரிடம் இருந்து பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.

பெபிலியான ரஜ மஹா விகாராதிபதி வெல்லம்பிடியே சுமன தம்ம தேரர் உள்ளிட்ட மஹாசங்கத்தினரும் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
இந்தியா, பங்களாதேஷ், ரஷ்யா, மாலைதீவு மற்றும் பிரான்ஸ் நாட்டின் கலாசார அம்சங்கள் மற்றும் சிங்கள, தமிழ் பாடல்களின் மூலம் நிகழ்வு சிறப்பிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.