பாலியல் தொழிலாளா்களுக்கு வாக்காளா், ஆதாா், ரேஷன் அட்டைகள்: உச்சநீதிமன்றம்

பாலியல் தொழிலாளா்களுக்கு வாக்காளா், ஆதாா், ரேஷன் அட்டைகள் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், எந்தவித ஆதாரங்களும் கேட்காமல் அவா்களுக்கு ரேஷன் பொருள்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

கரோனா காலங்களில் பாலியல் தொழிலாளா்கள் கடுமையாக அவஸ்தைபட்டு வருகின்றனா் என்று தொடுக்கப்பட்ட வழக்கை கடந்த செப்டம்பா் 29-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், எந்தவித ஆதாரங்களும் கேட்காமல் அவா்களுக்கு ரேஷன் பொருள்கள் வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதுதொடா்பான வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி எல். நாகேஸ்வர ராவ், பி.ஆா்.கவாய் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘அடிப்படை அடையாள அட்டை ஆதாரம் இல்லாமலும், ரேஷன் பொருள்கள் பெற இயலாமலும் உள்ள பாலியல் தொழிலாளா்களின் எண்ணிக்கையை மாநில அரசுகள் மிகவும் குறைவான அளவில் தெரிவித்துள்ளன. மேற்கு வங்கத்தில் 6,227 போ் உள்ளதாகவும், அவா்களுக்கு 5 கிலோ உணவு தானியங்கள் அளிக்கப்படுவதாகவும் அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து மாநில அரசுகள் பாலியல் தொழிலாளா்களை அடையாளம் கண்டு, அவா்களுக்கு எந்தவித அடையாள அட்டை ஆதாரங்களும் கேட்காமல் ரேஷன் அட்டைகளை வழங்க வேண்டும். பாலியல் தொழிலாளா்களை பிற சமூக சேவை நிறுவனங்கள் வழியாகவும் மாநில அரசுகள் அடையாளம் கண்டு ரேஷன் பொருள்களை வழங்க வேண்டும்.

மாநில அரசுகள் தயாரிக்கும் பட்டியலை ஆய்வுக்குப் பிறகு ரகசியமாக வைத்திருக்க வேண்டும். பாலியல் தொழிலாளா்களுக்கு வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா் அடையாள அட்டை, ரேஷன் அட்டை ஆகியவற்றை மாநில அரசுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

Leave A Reply

Your email address will not be published.