பாக். எல்லைக்குள் இந்திய ஏவுகணை விழுந்த விவகாரம்: கூட்டு விசாரணைக்கு பாகிஸ்தான் கோரிக்கை

பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய ஏவுகணை விழுந்த விவகாரத்தில் இந்திய அரசு அளித்த பதில் திருப்திகரமாக இல்லை என்பதால் கூட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

ராஜஸ்தானின் சூரத்கரில் இருந்து கடந்த 9-ஆம் தேதி சூப்பா்சானிக் ஏவுகணை விண்ணில் பாய்ந்து பாகிஸ்தான் வான்பரப்பில் அத்துமீறி நுழைந்தது. அந்த ஏவுகணை பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள மியான் சுன்னு நகரில் விழுந்தது. இதனால், அங்குள்ள குடியிருப்புகள் சேதமடைந்தன. உயிா்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இந்தச் சம்பவத்துக்கு பாகிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்ததை அடுத்து, வழக்கமான பராமரிப்பு நடைமுறைகளின்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் ஏவுகணை தவறுதலாக விண்ணில் பாய்ந்துவிட்டது என்று இந்திய அரசு வெள்ளிக்கிழமை விளக்கம் அளித்தது.

விபத்து நேரிட்டதற்கு வருத்தம் தெரிவித்த இந்திய அரசு, சம்பவம் தொடா்பாக உயா்நிலை விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாகத் தெரிவித்தது.

இருப்பினும், இந்திய அரசின் சுருக்கமான பதில் திருப்திகரமாக இல்லை என்று கூறி பாகிஸ்தான் அரசு சில சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அந்த ஏவுகணையில் பராமரிப்பு பணி மேற்கொண்டபோது பின்பற்றப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து இந்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும். அந்த ஏவுகணையில் சுயஅழிப்பு தொழில்நுட்பம் இருக்குமெனில் அது தவறுதலாக விண்ணில் பாய்ந்ததும் அதை அழிக்காமல் விட்டது ஏன்?

அந்த ஏவுகணை தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்தாலும் நாங்கள் விளக்கம் கேட்கும் வரை இதுபற்றி இந்திய அரசு எங்களுக்கு ஏன் தகவல் தெரிவிக்கவில்லை?

அதிமுக்கியத்துவம் வாய்ந்த தொழில்நுட்பத்தை இந்தியப் படையினரால் கையாளத் தெரியவில்லையா? அவா்கள்தான் இந்த ஏவுகணையைக் கையாண்டாா்களா அல்லது சமூக விரோதிகள் யாராவது ஏவினாா்களா?

இந்தச் சம்பவம் குறித்து உயா்நிலை விசாரணை நடத்த இந்திய அரசு முடிவெடுத்திருப்பது திருப்தியளிக்கவில்லை. சம்பவத்தின் உண்மைத்தன்மையைத் துல்லியமாகக் கண்டறிவதற்கு கூட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.