இரண்டு கார்களை வழிமறித்து பள்ளத்தில் தள்ளிய காட்டு யானை.. பொள்ளாச்சியில் பயங்கரம்..

பொள்ளாச்சி ஆழியார் பகுதியில் சாலையில் சென்ற இரண்டு கார்களை வழிமறித்து பள்ளத்தில் தள்ளிய காட்டு யானை மூன்று பேர் காயங்களுடன் உயிர் தப்பினர்…

பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள நவமலை மின் வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் சரவணன் (வயது 49), இவர் அதே பகுதியில் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவரும் இவரது உறவினர்கள் இரண்டு பேரும் பொள்ளாச்சியில் இருந்து நவமலையில் உள்ள சரவணன் குடியிருப்பிற்கு இரு கார்களில் சென்றுள்ளனர்.

வால்பாறை சாலை கவியருவி பகுதியிலிருந்து நவமலை சாலையில் செல்லும் போது அங்கே சுற்றித்திரிந்த ஒற்றை காட்டு யானை இவர்கள் சென்ற பாதையின் குறுக்கே வந்து வாகனத்தை மறித்ததாகவும் இதனால் செய்வதறியாது திகைத்து வாகனத்தை பின்னோக்கி இயக்கியபோது வாகனத்தை விரட்டிய ஒற்றை காட்டு யானை முன்னால் சென்ற ஆம்புலஸ் ஓட்டுனர் சரவணன் இயக்கிச் சென்ற காரை முட்டி தூக்கி வீசி சாலையை விட்டு பள்ளத்தில் கவிழ்த்துள்ளது.

மேலும் அந்த யானை, புதரில் சிக்கிய காரை மூன்று முறை உருட்டி தாக்கியுள்ளது. அந்த நேரத்தில் அவ்வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் வனத்துறை ஊழியர்கள் நீண்ட நேரம் போராடி யானையை வனப்பகுதிக்குள் விரட்டினார்.

பிறகு காரில் சிக்கியிருந்த சரவணனை மீட்டு சிகிச்சைக்காக ஆழியாரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

சிறு காயங்களுடன் உயிர் தப்பிய சரவணன் மற்றும் அவரது உறவினர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது..

மாலை 5 மணிக்கு மேல் வன சாலைகளில் செல்ல வனத்துறை அதிகாரிகள் கட்டுப்பாடுகளை விதித்திருந்தும் சிலர் அதை மீறி செல்வதால் இதுபோன்ற விபத்துகள் நடப்பதாகவும்., இந்த ஒற்றை காட்டு யானை கடந்த 10 நாட்களாக அதே பகுதியில் உலா வந்து கொண்டிருப்பதாகவும் இதனால் நவமலை கிராம மக்களுக்கும் மின்வாரிய ஊழியர்களையும் கவனமாக இருக்க அறிவுறுத்தியதாகவும் வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியதோடு பொள்ளாச்சி வனச்சரகர் புகழேந்தி உத்தரவின்பேரில் வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் வனத்துறை ஊழியர்கள் யானையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்…

Leave A Reply

Your email address will not be published.