மயங்கி விழுந்த பள்ளி மாணவிக்கு பேய் ஓட்டிய சம்பவம்.. கல்வராயன்மலையில் பரபரப்பு

கல்வராயன்மலை உண்டி உறைவிடப் பள்ளியில் மயங்கி விழுந்த மாணவிக்கு திருநீர் வீசி பேய் ஓட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள கொட்ட புத்தூர் அரசு மழைவாழ் உண்டி உறைவிடப் பள்ளியில் 350-க்கு மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த மலைவாழ் பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு தனி விடுதி கட்டிடம் இல்லாததால் வகுப்பறையிலேயே தங்கி வருவதாக கூறப்படுகிறது. 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி பயின்று வரும் இந்த பள்ளியில் விடுதி காப்பாளர் , காவலாளி இல்லாமலும் அடிப்படை வசதிகளான தண்ணீர் மற்றும் கழிப்பறை கட்டிடங்கள் இல்லாமலும் உள்ளது.

ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட கழிப்பறை கட்டிடம் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வராத நிலையில் மாணவிகள் ஒரே நேரத்தில் நான்கு 5 பேர் மட்டுமே பயன்படுத்தக்கூடிய சிறிய கழிப்பறை கட்டிடம் உள்ளது. இங்கு தண்ணீர் வசதி இல்லாததால் அருகாமையில் உள்ள பள்ளி கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டியில் வாலியில் தண்ணீரை நிரப்பிக் கொண்டு சுமார் 20 அடி உயரமுள்ள கழிப்பறை கட்டிடத்திற்கு சென்று வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு பள்ளியில் தங்கியிருந்த மாணவி ஒருவர் மனஉளைச்சல் காரணமாக தன் கையில் பிளேடால் அறுத்துக் கொண்டதில் ரத்தம் கொட்டி உள்ளது. இதனால் அந்த மாணவி மயங்கி விழுந்துள்ளார். இதனைக்கண்ட சகமாணவியும் மயங்கி விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் காலையில் மாணவிகள் அறையைவிட்டு கழிப்பறைக்கு செல்வதற்காக அருகில் உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் பிடித்துக்கொண்டு சென்ற பொழுது கீழே சிதறிக் கிடந்த ரத்தக் கறைகளை பார்த்தவுடன் பதட்டத்தில் ஒரு மாணவி கீழே விழுந்துள்ளார். இதனால் ஏற்பட்ட காயத்தினால் ரத்தம் கொட்டி உள்ளது. இதனைக்கண்ட மேலும் இரு மாணவிகள் மயங்கி விழுந்தனர்.

இந்நிலையில் மாணவர்களின் கூச்சல் சத்தத்தை கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து பார்த்ததோடு எதையோ கண்டு மாணவிகள் பயந்து விட்டதாகவும் அருகிலுள்ள பேய் ஓட்டும் பூசாரி ஒருவரை அழைத்து வந்து வகுப்பறையில் வைத்து மாணவிகளுக்கு திருநீரை வீசி பேய் ஒட்டி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து 9 மணிக்கு மேல் பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள் மாவடிபட்டு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் மயங்கி விழுந்த 4 மாணவிகளையும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து பரிசோதித்த மருத்துவர்கள் விஷத்தன்மையுள்ள உணவு காரணம் இல்லை எனவும் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் கூறியுள்ளனர் . இதனைத் தொடர்ந்து சம்பவம் குறித்து தகவல் அறிந்த சார் ஆட்சியர் இளங்கோவன் மற்றும் கரியாலூர் காவல்துறையினர் மற்றும் மாவடிபட்டு ஆரம்பசுகாதாரநிலைய மருத்துவர்கள் பள்ளிக்கு விரைந்து வந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது மாணவிகள் தங்களுக்கு போதிய கழிப்பறை கட்டிட வசதி இல்லாமல் இரவு நேரங்களில் கூட திறந்த வெளிக்கு செல்லும் அவல நிலை உள்ளதாகவும், தங்களுக்கு பெண் விடுதி காப்பாளர் மற்றும் மாணவிகளுக்கு தனி விடுதி கட்டிடம் வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். மேல்நிலைப் பள்ளி வரை உள்ள இந்த பள்ளியில் தங்கி பயிலும் மாணவிகளுக்கு இரவு நேரங்களில் தங்கள் உடல் உபாதையை கழிக்க போதிய பாதுகாப்பின்மை இருப்பதினாலும், இரவு நேரங்களில் அவர்களைப் பாதுகாக்க பெண் விடுதி காப்பாளர் இல்லாததாலும் பள்ளி மாணவிகள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பள்ளியை நிர்வகிக்கும் பொறுப்பற்ற ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.