பதவி உயர்வில் இடஒதுக்கீட்டு முறையை முற்றிலும் கைவிடுகிறதா தமிழக அரசு?

சமூக நீதி கொள்கைகளின் தொட்டில் என்று அழைக்கப்படும் தமிழ்நாடு, தன்னுடைய சட்ட போராட்டத்தால், அகில இந்திய மருத்துவக் கல்வி இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் 27% இடஒதுக்கீட்டை உறுதி செய்தது. இந்த வெற்றி திராவிட கட்சிகளின் சமூக நீதி கொள்கைகள் மீது தேசிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு அரசு பணிகளில் பதவி உயர்வில் பின்பற்றப்பட்டு வந்த இன சுழற்சி முறையை, உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் ரத்து செய்துள்ளது. இந்த தீர்ப்பு, தமிழ்நாடு அரசின் சமூக நீதியை நோக்கிய பயணத்தில் பின்னடைவாக கருதப்படுகிறது.

2011 மக்கள் தொகை அடிப்படையில், தமிழகத்தில் பட்டியலின மக்கள் 21.11% பேர் உள்ளனர். 1971 மக்கள் தொகையின் அடிப்படையில் பட்டியலின மக்களில் 16% பேர் மட்டுமே கல்வியறிவு பெற்றவர்களாக இருந்தனர். 2011 கணக்கீட்டின் அடிப்படையில் இம்மக்களில் 64% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். தமிழகத்தின் சராசரியான 80.3% சதவீதத்தை ஒப்பீடும் போது, பட்டியலின மக்களின் கல்வியறிவு என்பது சற்றே பின் தங்கியிருந்தாலும், தசாப்தங்களாக சாதிய ஒடுக்குமுறையால் மறுக்கப்பட்டு வந்த கல்வியறிவு திராவிட இயக்கங்களின் சமூக நீதி திட்டங்களால் தற்போது சாத்தியமாகிறது.

இடஒதுக்கீட்டு கொள்கையால், அரசு பணிகளில் பட்டியலின மக்களின் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படுகிறது.ஆனால் உயர் பதவிகளில் பட்டியலின மக்களின் பிரதிநிதித்துவம் என்பது மிக சொற்பமாகவே உள்ளது. சில துறைகளில் தமிழக அரசின் இன சுழற்சி முறையால் சொற்ப எண்ணிக்கையிலாவது இந்த உயர் பதவிகளில் பட்டியலின மக்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் வருவாய்துறை மற்றும் காவல்துறை போன்ற துறைகளின் உயர் பதவிகளில் பட்டியலின மக்களின் பிரதிநிதித்துவம் இல்லை என்றே கூறலாம்.

இந்த சூழ்நிலையில் தமிழக அரசின் இன சுழற்சி முறையை நீதிமன்றங்கள் ரத்து செய்ததால், பதவி உயர்வில் இடஒதுக்கீட்டை நீதிமன்றம் ஏற்கவில்லை என்ற தவறான பார்வை முன்வைக்கப்படுகிறது. அதாவது, தமிழ்நாடு அரசு பணிகளில் நேரடி தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 69% இடஒதுக்கீடு அடிப்படையில் பணி நியமனம் நடைபெறுகிறது.

இவர்கள் சார்நிலை பணியாளர்கள் , அமைச்சக பணிகள், குரூப் 1 நிலை பணிகள், தலைமை செயலக பணிகள் என்று வெவ்வேறு பணிகளில் நேரடியாக நியமனம் செய்யப்படுகிறார்கள்.

இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டிருந்தாலும் பதவி உயர்விலும் அனைவருக்கு வாய்ப்பு வழங்க ஏதுவாக இன சுழற்சி முறை கடைபிடிக்கப்பட்டு வந்தது. இதன் மூலமாக அனைத்து இடஒதுக்கீட்டு பிரிவினர் உயர் பதவிகளுக்கு செல்வது ஓரளவு உறுதி செய்யப்பட்டது. இனசுழற்சி முறையில் பொதுப் பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள்,பதவி உயர்வு வழங்கப்படும் போது, பாதிக்கப்பட்டனர்.

இவர்கள் நீதிமன்றத்தை நாடிய நிலையில் தமிழக அரசின் இன சுழற்சி முறையை 2015ல் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை உச்ச நீதிமன்றமும் 2016ல் உறுதி செய்தது. பின்பு தமிழக அரசால் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டத்தில், கடந்த 2016-ஆம் மேற்கொள்ளப்பட்ட சட்டமும் , உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.

இந்த உத்தரவு மூலம் பதவி உயர்வில் அனைத்து சமூதாய மக்களுக்கும் சுழற்சி முறையில் வாய்ப்பு வழங்கிய நடைமுறை முடிவுக்கு வந்தது. மேலும் பதவி உயர்வில் யாருக்கும் இடஒதுக்கீடு இல்லை என்ற கருத்து தவறாக பரப்பப்படுகிறது. பதவி உயர்வில் இடஒதுக்கீடு குறித்த நீதிமன்றத்தின் அணுகுமுறையை புரிந்துக்கொள்ள இரு வழக்குகள் மிக முக்கியமானது.

1. 1992 இல் இந்திரா சஹானி வழக்கில் பணி நியமனத்தில் இடஒதுக்கீட்டை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், பதவி உயர்வில் ஏற்றுக்கொள்ளவில்லை.

2. எம். நாகராஜ் வழக்கில் அரசு பணிகளில் பட்டியல் இன மக்களுக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் கூறு 16 (4ஏ) செல்லும் என்றும், தீர்ப்பளித்தது. மேலும் போதிய பிரதி நிதித்துவம் இல்லை என்பதற்கான தரவுகளின் அடிப்படையில் இதை உறுதி செய்யவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இத்தீர்ப்புகளின் அடிப்படையில், வாய்ப்புகள் மறுக்கப்படும் பட்டியலின மக்களுக்கு உயர்பதவிகளுக்கு செல்ல இடஒதுக்கீடு வழங்கலாம் என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமையின் அடிப்படையிலும், உச்சநீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையிலும், கர்நாடக அரசு உயர் பதவிகளில் பட்டியலின மக்களின் போதிய பிரதி நிதித்துவம் இல்லாததை உணர்ந்த அம்மாநில அரசு, உரிய தரவுகளை கொண்டு 2018 ஆம் ஆண்டு இயற்றிய சட்டம், தற்போது நடைமுறையில் உள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் உரிய தரவுகளை சேகரித்து மாநில அரசு பணிகளில் கேடர்களின் அடிப்படையில் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்புவதிலும், பட்டியலின மக்களுக்கு உயர்பதவிகளில் இடஒதுக்கீடு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால் அது பட்டியலின மக்களை வஞ்சிக்கும் செயல் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழக அரசின் இனசுழற்சி முறையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டதால், பதவி உயர்வில் இடஒதுக்கீட்டு கொள்கையை முற்றிலுமாக மாநில அரசு கைவிட்டுள்ளது. தற்போது பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவதற்கான நடைமுறைகளையும் தமிழக அரசு தொடங்கியுள்ளது. இது பட்டியலின மக்கள் உயர் பதவிகளை எட்டுவது என்பது சாத்தியமற்றதாக்கி விடும் சூழல் உள்ளது. மேலும் தமிழக அரசின் சமூக நீதியை நோக்கிய பயணம் 100 விழுக்காடு முழுமை பெறாமலேயே போய்விடும்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற உத்தரவு மூலம் அனைத்து பிரிவு மக்களையும் கோயில்களின் கருவறை வரைக்கும் தற்போதைய அரசு கைப்பிடித்து அழைத்து சென்றது. அதே போல் அரசு பணிகளில் திரைக்கு பின்னால் இருக்கும் உயர் பதவிகளிலும் அனைத்து பிரிவினருக்கும் வாய்ப்பு கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அதற்கேற்ப உரிய தரவுகளை பெற்று, சமூக நீதியை அனைத்து நிலைகளிலும் தமிழக அரசு உறுதி படுத்த வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.