இரண்டு துண்டான கையை ஒட்டவைத்து கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை

குடும்பத்தகராறு காரணமாக அரிவாளால் வெட்டப்பட்டு வலது கை துண்டிக்கப்பட்ட நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு அறுவை சிகிச்சை செய்து கையை ஒட்டவைத்து மருத்துவர்கள் சாதனை செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் ஒரிசா மாநில இளைஞரான 21 வயது கணேஷ் வசித்து வருகிறார். கடந்த 8ஆம் தேதி குடும்பத்தகராறு காரணமாக நடந்த பிரச்சினையில், அவரது உறவினர் ஒருவர் கணேஷை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் முதுகு, கழுத்து ஆகியவற்றில் வெட்டு விழுந்ததோடு வலது கை துண்டாக வெட்டப்பட்டது.

இதையடுத்து கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் கணேஷ் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து கணேஷின் துண்டான கைவிரல்களை ஈர துணி சுற்றி ஐஸ்கட்டி பெட்டியில் வைத்து பத்திரமாக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

இதையடுத்து துரிதமாக செயல்பட்ட அரசு மருத்துவர்கள் மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சையை மேற்கொண்டு துண்டான கையை உடலுடன் இணைத்தனர். அப்போது எலும்புகள், தசைகள், நரம்புகள் மற்றும் ரத்தக் குழாய்களும் இணைக்கப்பட்டன. இதை அடுத்து கடந்த 20 நாட்களாக மருத்துவர்களின் மேற்பார்வையில் இருந்த கணேஷுக்கு கை இணைந்ததோடு குணமாகி வருகிறார்.

துரிதமாக செயல்பட்டு சிக்கலான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்த அரசு மருத்துவ குழுவினருக்கு அனைவர் மத்தியிலும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.