பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் மாஸ்… ஹைதராபாத்தை வீழ்த்திய டெல்லி கேப்பிடல்ஸ்.

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

15வது ஐபிஎல் தொடரின் 50வது லீக் போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின.

மும்பை Brabourne மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 92* ரன்களும், பவல் 67* ரன்களும் எடுத்தனர்.

இதன்பின் 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு, அந்த அணியின் துவக்க வீரர்களான அபிசேக் சர்மா (7) மற்றும் கேன் வில்லியம்சன் (4) ஆகியோர் பெரும் ஏமாற்றம் கொடுத்தனர். இதனையடுத்து களமிறங்கிய ராகுல் த்ரிபாட்டி 22 ரன்களும், அதிரடியாக விளையாடிய மார்க்ரம் 42 ரன்களும் எடுத்து கொடுத்தனர்.

அடுத்தடுத்து களமிறங்கிய சஷான்க் சிங் (10), அபாட் (7) ஆகியோர் வந்த வேகத்தில் வெளியேறினாலும், மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி டெல்லி அணிக்கு நிக்கோலஸ் பூரண் தோல்வி பயத்தை காட்டினார். டெல்லி அணியின் பந்துவீச்சை நாளாபுறமும் சிதறடித்த பூரண் 34 பந்துகளில் 62 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்ததால், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் மட்டுமே எடுத்த ஹைதராபாத் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்தநிலையில், ஹைதாராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு சமூக வலைதளங்களில், வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. அதே போல் டெல்லி அணியின் இந்த வெற்றிக்கு காரணமான வார்னர், பவல் போன்ற வீரர்களை பாராட்டும் கிரிக்கெட் ரசிகர்கள், ஹைதராபாத் அணியின் இந்த தோல்விக்கு காரணமான உம்ரன் மாலிக், கேன் வில்லியம்சன் போன்ற வீரர்களை விமர்சித்தும் வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.