நடிகை நயன்தாராவுக்கு ஜூன் 9-ந் தேதி திருமணம்?

நடிகை நயன்தாரா கேரளாவை சேர்ந்தவர். அவருடைய சொந்த பெயர் டயானா. ‘மனசினகரே’ என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான அவர், சரத்குமார் நடித்து, ஹரி இயக்கிய ‘ஐயா’ படத்தின் மூலம் தமிழ்பட உலகுக்கு கதாநாயகியாக அறிமுகமானார்.

ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், விக்ரம், சூர்யா, கார்த்தி, விசால், தனுஷ் உள்பட முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். இதேபோல் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா போன்றவர்களுடன் ஜோடி சேர்ந்து தெலுங்கு பட உலகிலும் முன்னணி கதாநாயகி ஆனார்.

இப்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழி படங்களிலும் அதிக சம்பளம் வாங்கி ‘நம்பர்-1’ கதாநாயகியாக இருந்து வருகிறார். திரையுலகில் அவர் பரபரப்பான கதாநாயகியாக இருப்பதுபோல், சொந்த வாழ்க்கையிலும் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

நடிகர்கள் சிம்பு, பிரபுதேவா ஆகிய இருவருடன் இணைத்து பேசப்பட்ட நயன்தாரா, மூன்றாவதாக டைரக்டர் விக்னேஷ் சிவனுடன் இணைத்து பேசப்படுகிறார். இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலேயே ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். சமீபகாலமாக ஜோடியாக கோவில்களுக்கு சென்று வந்தார்கள். சொந்த பட தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நயன்தாராவின் தந்தை குரியன் உடல்நல குறைவாக இருந்து வருகிறார். அவர் மகளின் திருமணத்தை பார்க்க விரும்புகிறார். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற நயன்தாராவும் முன்வந்து இருக்கிறார். அவருடைய காதலர் விக்னேஷ் சிவனும் திருமணத்துக்கு சம்மதித்து விட்டார்.

இதைத்தொடர்ந்து நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் அடுத்த மாதம் (ஜூன்) 9-ந் தேதி திருமலையில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. திருமணம் நடைபெற இருக்கும் மண்டபத்தை முன்பதிவு செய்திருப்பதுடன், மண்டபத்தை இருவரும் நேற்று பார்வையிட்டதாகவும் பேசப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.