இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்ப திட்டமா? மத்திய அரசு விளக்கம்

இலங்கையில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக இந்திய படைகள் அங்கு அனுப்பிவைக்கப்பட உள்ளதாக வெளியான தகவலுக்கு இந்தியா தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. படைகளை அனுப்புவது குறித்து இந்திய அரசு யோசிக்கவே இல்லை என்றும் இலங்கையில் மக்களாட்சிக்கு ஆதரவாக இருப்பதே இந்தியாவின் நிலைப்பாடு என்றும் இலங்கைக்கான இந்திய தூதரகம் விளக்கம் அளித்துள்ளது.

இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச அண்மையில் விலகினார். அதைத்தொடர்ந்து அரசுக்கு எதிராக போராடியவர்களுக்கும் ராஜபக்ச ஆதரவாளர்களுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. அம்பன்தோட்டாவில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச ஆகியோரின் பாரம்பரிய வீட்டை போராட்டக்காரர்கள் தீயிட்டுக்கொளுத்தினர்.

மேலும், நேற்று முன் தினம் கொழும்புவில் உள்ள மகிந்த ராஜபக்சவின் அலரி மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால் பதற்றம் நிலவியது. இதனால், ராணுவத்தின் உதவியுடன் அலரி மாளிகையில் இருந்து வெளியேறிய மகிந்த ராஜபக்சேவும், அவரது குடும்பத்தினரும் சீன நிறுவனத்திற்கு சொந்தமான ஷங்கீரிலா ஹோட்டலில் தஞ்சம் புகுந்தனர்.

அதன்பிறகு கொழும்புவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திரிகோணமலையில் உள்ள தீவுக்கு மகிந்த ராஜபக்சே குடும்பத்தினர் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு மகிந்த ராஜபக்சவுடன் நமல் ராஜபக்ச, பசில் ராஜபக்ச மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் குடும்பமும் பதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜபக்ச குடும்பத்தினர் கொழும்பிலிருந்து திரிகோணமலைக்கு தப்பிச் செல்வதற்கு தேவையான உதவிகளை ராணுவத்தினர் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இலங்கை காட்டுநாயக்க விமான நிலைய பகுதியில் இருந்து போராட்டக்காரர்கள் வெளியேற்றப்பட்டு, அவ்விடம் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நேற்று இந்த பகுதியில் பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் வெளிநாடு தப்பி செல்வதாக தகவல் பரவிய சூழலில், விமான நிலையம் சென்ற ஒவ்வொரு வாகனத்தையும் மக்கள் சோதனை செய்தனர். இந்நிலையில் இன்று விமான நிலைய பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் நிலவும் அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு இந்திய படைகள் அங்கு அனுப்பி வைக்கப்படும் என்று ஊடகங்களில் வெளியான தகவலை கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் நிராகரித்துள்ளது. படைகளை அனுப்புவது குறித்து இந்திய அரசு யோசிக்கவே இல்லை என்றும் இலங்கையில் மக்களாட்சிக்கு ஆதரவாக இருப்பதே இந்தியாவின் நிலைப்பாடு என்றும் இந்திய தூதரகம் விளக்கமளித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.