நேபாள விமானத்தில் இருந்த 22 பேரும் பரிதாப பலி: 21 உடல்கள் மீட்பு.

நேபாளத்தின் தாரா ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான ‘தி டுவின் ஓட்டர் 9 என்-ஏ.இ.டி.’ என்ற விமானம், நேற்று முன்தினம் காலை 9.55 மணிக்கு பொக்காராவில் இருந்து ஜோம்சாம் நகருக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில் 3 ஊழியர்கள் உள்பட 22 பேர் இருந்தனர். இதில் 4 பேர் மராட்டியத்தின் மும்பை அருகே உள்ள தானேயை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த விமானம் கிளம்பிய 15 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து திடீரென மாயமானது.

இதனால் விமான போக்குவரத்து அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் உருவானது. உடனே, மாயமான விமானத்தை தேடும் பணிகளை நேபாள அரசு முடுக்கி விட்டது. நேபாள ராணுவமும், போலீஸ் படையும் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கின. மேலும் எம்.ஐ-17 ஹெலிகாப்டர் உள்ளிட்ட ஹெலிகாப்டர்களும், மாயமான விமானத்தை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

ஆனால் பலத்த மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக மாயமான விமானத்தை கண்டறிவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. எனினும் போர்க்கால அடிப்படையில் தேடும் பணிகளை அதிகாரிகள் முடுக்கி விட்டனர். அதன்பயனாக, மாயமான அந்த விமானம் முஸ்டாங் மாவட்டத்தின் தசாங்-2 என்ற இடத்தில் மலையில் 14,500 அடி உயரத்தில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால் மோசமான வானிலை காரணமாக சம்பவ இடத்தை அடையவோ, அதில் இருந்துவர்களின் கதி குறித்து அறியவோ உடனடியாக முடியவில்லை. இதனால் நேற்று முன்தினம் இரவில் மீட்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. பின்னர் நேற்று காலையில் மீண்டும் மீட்பு பணிகள் தொடங்கின.

இதற்காக அனுப்பி வைக்கப்பட்ட பிஸ்டெயில் ஏர் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் ஒன்று, நேற்று காலை 8.10 மணியளவில் விபத்து நடந்த இடத்தை அடைந்தது. அந்தவகையில் விபத்து நடந்து சுமார் 20 மணி நேரத்துக்குப்பின்னரே, சம்பவ இடத்தை மீட்புக்குழுவினர் அடைய முடிந்தது. அதைத்தொடர்ந்து ராணுவம், விமானப்படை, போலீசார் மற்றும் மலையேற்ற வீரர்கள் அடங்கிய மீட்புக்குழுவினர் பல்வேறு ஹெலிகாப்டர்களில் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது விமானம் முற்றிலும் நொறுங்கி கிடப்பதையும், அதில் இருந்த 22 பேரும் பலியாகி இருந்ததையும் கண்டுபிடித்தனர். அவர்களின் உடல்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. அவற்றை மீட்கும் பணிகளை அவர்கள் உடனடியாக தொடங்கினர். பின்னர் அவற்றை ஒவ்வொன்றாக மீட்டு, மலையடிவாரத்துக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து 21 உடல்கள் மீட்கப்பட்டதாக கடைசியாக கிடைத்த தகவல்கள் தெரிவித்தன. மீதமுள்ள ஒரு உடலையும் மீட்கும் பணிகளும் தொடர்ந்து நடந்தன. இந்த மீட்பு பணிகளில் சுமார் 100 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். மீட்கப்பட்ட உடல்கள் அனைத்தும் பின்னர் தலைநகர் காத்மாண்டுக்கு கொண்டு வரப்பட்டன.

அங்கிருந்து அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை நேபாள அதிகாரிகள் மேற்கொண்டனர். இந்த விபத்தில் மராட்டியத்தின் தானேயை சேர்ந்த அசோக் குமார் திரிபாதி, அவரது மனைவி வைபவி பண்டேகர், குழந்தைகள் தனுஷ், ரித்திகா ஆகிய 4 பேரும் பலியாகி உள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகி இருக்கும் இந்த சம்பவம் மராட்டியத்தில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விமானம் மலை உச்சியில் மோதி விபத்துக்குள்ளாகி இருப்பதாக தாரா ஏர் நிறுவன செய்தி தொடர்பாளர் பர்தாலா கூறியுள்ளார். இதனால் அதில் இருந்தவர்களின் உடல்கள் 100 மீ. சுற்றளவில் சிதறிக்கிடந்ததாக அவர் கூறினார். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அதிபர் பித்யா தேவி பண்டாரி இரங்கல் தெரிவித்து உள்ளார். 22 பேரை பலி கொண்ட இந்த விபத்து நேபாளத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.