தமிழ் எம்பிக்கள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்- சார்ள்ஸ் நிர்மலநாதன்

வடக்கு – கிழக்கில் தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வண்ணம் ஒற்றுமையாக பயணிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்விலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,

“கூட்டமைப்பானது கடந்த தேர்தலில் 16 ஆசனங்களை பெற்றுக்கொண்ட நிலையில் இம்முறை 10 ஆசனங்களையே பெற்றுள்ளது. வன்னியில் கூட ஒரு ஆசனத்தை இம்முறை நாம் இழந்திருக்கின்றோம்.

இந்த தேர்தலில் ஆட்சியாளர்கள் அதிகாரபலம் மற்றும் பணபலம் எனபவற்றை பயன்படுத்தியிருந்தார்கள். அதனை விட எம்மவர்கள் பிரிந்து நின்று இந்த தேர்தலை சந்தித்தார்கள். இப்படியான சூழலிலும் கூட்டமைப்பிற்கு வாக்களித்த அனைத்து தமிழ் உறவுகளிற்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இம்முறை தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் தேசிய கட்சிகளிற்கு அதிகமாக வழங்கப்பட்டுள்ளது. அது ஏன் என்பதை எம்மால் இன்னும் ஊகிக்க முடியவில்லை. எமது கட்டமைப்புகளை சிதைப்பதற்கு அவர்கள் தயாராக இருக்கின்ற நிலையில் சிலர் ஏன் இவ்வாறான மனநிலையில் இருந்தார்கள் என்பது வேதனையான விடயமாக இருக்கின்றது.

எமக்கு ஏற்ப்படக்கூடிய நெருக்கடிகளை நாங்கள் புரிந்துகொள்ளாத நிலையில் இருந்திருக்கிறோம். கடந்ததேர்தலில் எனக்கு கிடைத்த விருப்புவாக்குகள் கூட இம்முறை குறைந்தே காணப்படுகின்றது. எனவே தேர்தல் முடிவை ஒரு பாடமாகவே நான் எடுத்துக்கொண்டிருக்கிறேன்.

அத்துடன் வடக்கு- கிழக்கில் தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழர்களின் அரசியல் விடிவிற்காக இணைந்து பயணிக்கவேண்டும் என்பது எனது விருப்பம். அந்த ஒற்றுமையை நான் எதிர்பார்த்து நிற்கின்றேன்” – என்றார்.

Comments are closed.