கோட்டா – ரணில் முறுகல் : தூதுக்கு திருகுமார் நடேசன்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடந்த வாரம் மத்திய வங்கியை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட முயன்றமையால் , ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் காரசாரமான வார்த்தைப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய வங்கியின் தற்போதைய ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவை பதவி நீக்கம் செய்து தனது நண்பரான தினேஸ் வீரக்கொடிக்கு பதவியை வழங்குமாறு பிரதமர் கடந்த வாரம் ஜனாதிபதியை சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தார்.

இக்கால கட்டத்தில் ஜனாதிபதியை , நந்தலால் வீரசிங்க சந்தித்த போது மத்திய வங்கி , எவருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமல் சுயாதீனமாக இயங்க உத்தரவாதம் அளித்திருந்தார்.

எவ்வாறாயினும் பிரதமரது கோரிக்கைக்கு , ஜனாதிபதி தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன் அதனைச் செய்யவே முடியாது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்த நிலைப்பாட்டை ஆட்சேபித்துள்ள ரணில் விக்ரமசிங்க, நிதியமைச்சர் மற்றும் பிரதமர் பதவிகளில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

விக்கிரமசிங்கவின் பதிலால் கோபமடைந்த ஜனாதிபதி, அவர் பதவி விலக வேண்டுமெனில் தாராளமாக பதவி விலகலாம் என்றும் பதிலளித்துள்ளார்.

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான இந்த விசேட கலந்துரையாடல், ராஜபக்ச குடும்பத்தின் உறவினரும், திரு.விக்கிரமசிங்கவுக்கும் ராஜபக்ச குடும்பத்துக்கும் இடையிலான நீண்டகால தூதுவருமான திருகுமார் நடேசனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திருகுமார் நடேசன் பிரபல தொழிலதிபர் மற்றும் நிருபமா ராஜபக்சவின் கணவர் ஆவார்.

அண்மையில் திருகுமார் நடேசன் டுபாயில் இருந்தபோது திரு.விக்கிரமசிங்க அவரை அழைத்து அவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் விசேட சந்திப்பொன்றை ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

அதன்படி, நாடு திரும்பிய திருகுமார் நடேசன் இந்த கலந்துரையாடலை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுத்திருந்தார்.

இக்கலந்துரையாடலில் திருநடேசனும் கலந்துகொண்டதாக அறியமுடிகிறது.

மல்வானையில் உள்ள பிரபல வீடு தொடர்பில் திருகுமார் நடேசன் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில், இன்று நீதிமன்றம் அவரை குற்றச்சாட்டில் இருந்து விடுவித்து விடுதலை செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.