கீழ்பாக்கம் மனநல மருத்துவமனை நோயாளிகள் தொடர்பான வழக்கு- தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்

மனநல பாதிப்பிலிருந்து முழுமையாக குணமடைந்த பிறகும், கீழ்ப்பாக்கம் மன நல மருத்துவமனையில் வாடுவதை தடுப்பது குறித்து தமிழ்நாடு மாநில மனநல ஆணையத்திற்கு அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்கக கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜெபமணி ஜனதா கட்சியின் பொதுச் செயலாளரான ஜெ.மோகன்ராஜ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையின் வருந்தத்தக்க நிலை குறித்து சமூக ஊடகங்களில் வெளியான செய்தியில், காமராஜரிடம் நெருங்கிய பழகியவரும், முன்னாள் அமைச்சருமான கக்கனின் மகன் நடராஜமூர்த்தி சங்கிலியால் பிணைக்கப்பட்டு நகர முடியாத நிலையில் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் இருப்பதாகவும், இங்கு 3,000 நோயாளிகள் உள்ள நிலையில் சுமார் 500க்கும் மேற்பட்ட நபர்கள் முழுமையாக குணமடைந்தாலும் இன்னும் மருத்துவமனையில் வாடுவதாக செய்தியில் தெரிவிக்கபட்டிருந்தது என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக உரிய நடவடிக்கை கோரி தமிழ்நாடு மாநில மனநல ஆணையத்தின் தலைமைச் செயல் அதிகாரிக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மனு அளித்தும் தற்போது வரை எந்த பதிலும் வரவில்லை என மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். எனவே தான் அளித்த மனு மீது தமிழ்நாடு மாநில மனநல ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வு, சமூக வலைதள தகவல்களில் அடிப்படையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், மனுவில் தெரிவிக்கப்பட்ட தகவல்களின் உண்மைத்தன்மையை ஆராயாமல், எந்த வித ஆதாரங்களும் இல்லாமல் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதேசமயம், முறையாக ஆதாரங்களை திரட்டி புதிதாக வழக்கு தாக்கல் செய்ய அனுமதியளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.