என் மீதான உங்களின் பிழையான புரிதல் என் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ரணிலுக்குச் சாணக்கியன் கடிதம்.

தனது நாடாளுமன்ற உரை தொடர்பான பிழையான புரிதல் காரணமாக தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கடந்த மே மாதம் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்தை மீளப்பெற வேண்டும் எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த வெள்ளிக்கிழமை குறிப்பிட்டிருந்தார்.

20ஆவது அரசியமைப்புத் திருத்தம் உட்பட நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு ஆதரவளித்தமை காரணமாகவே பலரின் வீடுகள் எரியூட்டப்பட்டதாக சாணக்கியன் வெளியிட்ட கருத்து ஏற்புடையதல்ல. இந்தக் கருத்தின் மூலம் சாணக்கியன் நடந்த வன்முறைகளை ஏற்றுக்கொள்கின்றாரா? மரணத்தை ஏற்றுக்கொள்கின்றாரா? எனவும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்தநிலையில், இது குறித்து தெளிவுபடுத்தும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்தக் கடிதத்தில்,

“கடந்த மே மாதம் 20ஆம் திகதி, எனது சமீபத்திய நாடாளுமன்ற உரை குறித்த ஒரு தெளிவுபடுத்துதலின் கட்டாயம் எனக்குள்ளது.

அதனடிப்படியில் நான் வன்முறையைத் தூண்டக்கூடிய எந்தவொரு நடவடிக்கைகளிலும் ஒருபோதும் ஈடுபடவும் இல்லை; ஆதரிக்கவும் இல்லை; ஊக்குவிக்கவும் இல்லை என்பதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள் என்று நான் நம்புகின்றேன்.

மூன்று தசாப்தங்களுக்கு மேல் பல விதமான பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ள ஓர் சமூகத்தை நான் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற போதிலும், சமாதானம், நல்லிணக்கம் மற்றும் அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கியதாகஅனைத்து இலங்கையர்களின் தேவைகள் மற்றும் அபிலாஷைகளுக்காக நான் குரல் கொடுத்து வருகின்றேன்.

நாம் பல சமூக பிளவுபடுவதைவிட ஒன்றாக இருப்பதில் இலங்கையர்களின் பன்முகத்தன்மையே எங்களின் பலமாக இருக்க வேண்டும் என்பதில் எனது கருத்துக்களில் நான் உறுதியாக இருக்கின்றேன்.

மே 9ஆம் திகதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்கள் குறைகள், தேவைகள் மற்றும் அபிலாஷைகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாக உணர்ந்ததால்தான், மக்கள் வன்முறையான முறையில் எதிர்வினையாற்றினார்கள் என்று உரைத்திருந்தேன்.

தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்களுக்கு வாக்களித்த மக்களின் நலனைப் பாதுகாப்பதில் தங்கள் கட்டாயக் கடமைகளில் இருந்து தவறிவிட்டதாக அவர்கள் ஒருவேளை உணர்ந்திருக்கலாம். என்னுடைய இந்தக் கூற்று தவறாகப் புரிந்துகொள்ளப்படுள்ளது.

எனவே, இதன் காரணமாகவே அவர்களுக்கு எனது நிலைப்பாட்டை விளக்குவது எனது தார்மீகக் கடமை என்று உணர்கின்றேன். அந்தவகையில், எனது அறிக்கைகளின் உண்மைத்தன்மையை பிரதமர் சரிபார்த்து, இது தொடர்பாக மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்.

உங்களுக்குத் தெரியும், இது போன்ற ஒரு மிகத் தீவிரமான அறிக்கை, அது நாட்டின் பிரதமரிடமிருந்தும், குறிப்பாக உங்களைப் போன்ற அந்தஸ்துள்ள ஒருவரிடமிருந்தும் வெளிப்படும்போது, பொதுமக்கள் அதை சந்தேகத்துக்கு இடமில்லாத உண்மை என்று கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ள முடியும். இது எனது நற்பெயருக்கு ஈடுசெய்ய முடியாத களங்கத்தை ஏற்படுத்தும் அதேவேளையில் எனது உயிருக்கும் அச்சுறுத்தலாக அமையும்.

இந்த நேரத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் முன்னுரிமையும் காலத்தின் தேவையும், இந்த நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்குவதும், அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதும், மூன்று வேளை உணவையும் உறுதிப்படுத்துவதும், அவர்களை இந்தத் துயரத்திலிருந்து விடுவிப்பதும் என்பதை நான் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இந்நாட்டு மக்களுக்கு ஆறுதல் அளிக்கும், அவர்களுக்கு உடனடி மற்றும் நிலையான நிவாரணம் அளிக்கும், அவர்களின் தற்போதைய குறைகள் மற்றும் எதிர்கால நல்வாழ்வுக்காக எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையையும் நான் என்றும் ஆதரிப்பேன்” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.