விடுமுறை சுற்றறிக்கை இன்றிரவு வெளியாகும்.

எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த வாரம் முதல் பிரதி வெள்ளிக்கிழமைகளில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அரச அலுவலகங்களுக்கு விடுமுறையை அறிவிப்பதற்கான சுற்றறிக்கை இன்றிரவு வெளியிடப்படவுள்ளது.

அரச சேவைகள், உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்னே இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சுக்களின் செயலாளர்களுடன் பேச்சு நடைபெறுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமைகளில் அத்தியாவசிய அரச சேவைகள் தவிர்ந்த ஏனைய அரச நிறுவனங்களுக்கு விடுமுறை வழங்க நேற்றுமுன்தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

அதேநேரம், சிரேஷ்டத்துவம் மற்றும் ஓய்வூதியக் கொடுப்பனவுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அரச சேவையாளர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக அனுப்புவதற்கான ஏற்பாடுகளில் திருத்தங்களை அறிவிக்கும் சுற்றறிக்கையும் இன்றிரவு வெளியிடப்படவுள்ளது

இதற்கும் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

கல்வி அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக அரச உத்தியோகத்தர் ஒருவர் தனது பணிக்காலத்தில் உயர்ந்தபட்சம் 5 வருடங்கள் சம்பளமற்ற விடுறையைப் பெற்றுக்கொள்வதற்கு தற்போது ஏற்பாடுகளின் பிரகாரம் இயலுமை உள்ளது.

ஆனாலும், குறித்த காலப்பகுதியில் ஓய்வூதியக் கணிப்பைக் கருத்தில்கொள்ளாமை, சிரேஷ்டத்துவத்தைப் பாதிக்கின்றமை மற்றும் ஏனைய நிபந்தனைகளால் அரச உத்தியோகத்தர்கள் அவ்வாறான விடுமுறையைப் பெறுவதில் ஆர்வம் காட்டுவதில்லை.

இதனைக் கருத்தில்கொண்டு, குறித்த ஏற்பாடுகளில் திருத்தங்களை மேற்கொண்டு இன்றிரவு சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ளது என அரச சேவைகள், உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்னே மேலும் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.