ஆட்சி மாற்றத்துக்கு தேர்தல் வேண்டும்! சம்பந்தனின் கூற்றை வரவேற்று சஜித் கருத்து.

“நாட்டில் ஆட்சி மாற்றத்தைக் கோரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கருத்தை வரவேற்கின்றோம். இந்த ஆட்சி மாற்றம் மக்கள் ஆணையுடன் ஜனநாயக வழியில் இடம்பெற வேண்டும். அதற்காக ஜனாதிபதித் தேர்தலும், நாடாளுமன்றத் தேர்தலும் விரைந்து நடத்தப்பட வேண்டும்.”

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“இலங்கையின் தற்போதைய அரசியல், பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வு காண வேண்டுமெனில் ஆட்சி மாற்றம் கட்டாயம் வேண்டும் என்று வலியுறுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கருத்தை நாம் வரவேற்கின்றோம். எமது கட்சியினதும் நிலைப்பாடும் இதுவாகவே உள்ளது.

தற்போதைய ஆட்சியில் சூதாட்ட அரசியல் சூடுபிடித்துள்ளது. இது நாட்டுக்குக் கேவலமானது. அதேவேளை, இந்த ஆட்சியால் நாள்தோறும் வீதிகளில் வரிசைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அனைத்துப் பொருட்களுக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொருட்களின் விலையும் நாள்தோறும் சடுதியாக உயர்வடைந்து வருகின்றது. மக்கள் பட்டினிச்சாவை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஆட்சி மாற்றம் நிகழ்ந்தால்தான் எமது நாடு மீண்டெழ சர்வதேசம் கைகொடுக்கும். இந்த அராஜக ஆட்சி தொடர்ந்தால் அதாள பாதாளத்தில் விழுந்து கிடக்கும் நாட்டின் பொருளாதாரத்தைத் தூக்கி நிமிர்த்த முடியாது. எனவே, ஆட்சி மாற்றம் உடன் அவசியம்.

ஆட்சி மாற்றம் மக்கள் ஆணையுடன் ஜனநாயக வழியில் இடம்பெற வேண்டும். அதற்காக ஜனாதிபதித் தேர்தலும், நாடாளுமன்றத் தேர்தலும் விரைந்து நடத்தப்பட வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.