அடுத்த தேர்தல் முடிவு எப்படி இருக்கும்?

பொதுஜன பெரமுன(மொட்டு) உருவாக்கப்பட்ட போது அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுஜன பெரமுன தொடர்பில் சில வெறுப்பூட்டும் கருத்துக்களை வெளியிட்டார்.

பொதுஜன பெரமுனயை உருவாக்கியவர்கள் பைத்தியம் பிடித்தவர்கள் போல் தெருவில் நடமாடும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று ஒருமுறை கூறினார்.

2018 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளை பார்த்து மைத்திரிபாலவுக்குத்தான் பைத்தியம் பிடித்துள்ளது என்றனர்.

பொதுஜன பெரமுனவின் பயணத்தை பார்த்து பைத்தியக்காரன் போல் மைத்திரிபால வீதியில் திரியும் நாள் வெகு தொலைவில் இல்லை என அனைவரும் கூறினர்.

2019 ஜனாதிபதித் தேர்தல் மற்றும் 2020 பொதுத் தேர்தல் முடிவுகளின் மூலம், அந்தக் கதை உண்மையாகிவிடும் என்று தோன்றியது.

அதற்கு பின் சில வருடங்கள் ஆனது. அப்போது மைத்திரிபால கூறியது இப்போது உண்மையாகிவிட்டது.

பொதுஜன பெரமுனவுக்குள் உள்ள எல்லோரும் இன்று பைத்தியம் பிடித்தோர் போல நடந்து கொள்கிறார்கள். இன்று பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர்கள் பைத்தியக்கார விடுதியிலிருந்து தப்பி ஓடுவது போல் ஓடி வெளியேறி , ஆளாளுக்கு ஒவ்வொரு கும்பலை உருவாக்கியுள்ளனர்.

பொதுஜன பெரமுனவுடன் இணைந்து தேர்தலில் நின்ற பெரிய கும்பலாக , மைத்திரிபாலவின் SLFP பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ள கும்பல் உள்ளது.

இரண்டாவது கும்பல் விமல், உதய கம்மன்பில மற்றும் வாசு கும்பல்.

மூன்றாவது கும்பல் அண்மையில் தேர்தல்கள் ஆணையாளரை சந்தித்த டலஸ் அலகபெரும.

நேற்று அனுர பிரியதர்ஷன யாப்பாவும் ஜோன் செனவிரத்னவும் கும்பல் ஒன்றை உருவாக்கி ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர்.

அத்தோடு, விஜயதாச ராஜபக்ச தனிப்பட்ட கும்பலை உருவாக்கியுள்ளார்.

நிமல் லன்சா மற்றொரு தனி கும்பலை உருவாக்கியுள்ளார்.

இவை அனைத்தும் அவர்கள் சுயாதீனமானவர்கள் என்று அர்த்தமாம்.

நாமெல்லோரும் மொட்டு என்று அன்று பெருமிதம் கொண்டவர்கள் இன்று மொட்டில் இல்லையாம். நாங்கள் தனி சுயேட்சை குழு என்று சொல்ல ஆரம்பித்து விட்டோம்.

அதாவது, காலிமுகத் திடல் போராட்டத்தின் மேல் ஏற்பட்ட பயம்.

1988-89 கலவரத்தின் போது UNPகாரர்கள், ஜே.வி.பி T-56 துப்பாக்கிகளுக்கு பயப்பட்டார்கள். அந்த பயத்தில் தங்கள் வீடுகளுக்கு முன்னால் நாங்கள் UNPயிலிருந்து விலகிவிட்டோம் என பதாகைகளை தொங்கவிட்டனர்.

இன்றுள்ள இந்த சுயேச்சைக் குழுக்கள், அதையே செய்கின்றன.

சுயாதீனம் என நாம் சுத்தமானவர்கள் என சொல்ல முயல்கிறார்கள்.

இப்போது இவர்கள் எல்லாம் சுத்தமானவர்களாம் , அடுத்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற இப்படி முயற்சிக்கிறார்கள்.

ஆனால் அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவோமா? இல்லையா? என்ற அச்சம் அவர்களுக்குள் ஏற்பட்டுள்ளது. காரணம் சுயாதீனமான குழுக்கள் இன்னும் தங்களுக்காக ஒரு கட்சியை அமைக்கவில்லை. கட்சி அமைத்தாலும் மக்கள் தங்களுக்கு வாக்களிப்பார்களா இல்லையா என்ற பயம் அவர்களுக்குள் கடுமையாக உள்ளது.

தேர்தலுக்கு பயப்படாத மூன்று கட்சிகள் உள்ளன.

அவை ஐக்கிய மக்கள் சக்தி (சஜித்) ,
ஜனதா விமுக்தி பெரமுன (அணுர திசாநாயக்க)
மற்றும் ஸ்ரீ.ல.சு.க. (மைத்ரிபால) ஆகியன.

இந்த கட்சிகளுக்கு அடிப்படை வாக்கு வங்கி ஒன்று உள்ளது.

பொதுஜன பெரமுனவுக்கும் (மொட்டு) அடிப்படை வாக்கு வங்கி ஒன்று உள்ளது.

அப்படியிருந்தபோதும், இந்த நேரத்தில் பொதுஜன பெரமுன விழுந்துள்ள படு குழியைப் பார்க்கும் போது, ​​பொதுஜன பெரமுன தேர்தலுக்கு தயாராகிவிட்டதாகக் கருத முடியாது. அதனால் அவர்களுக்குள்ளும் தேர்தல் பயம்.

பொதுஜன பெரமுனவும் , சுயேச்சைக் குழுக்களும் தேர்தலுக்குச் சென்றால் அது ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி.க்கு சாதகமாக அமையும் என்பதை அறிந்ததால் ரணிலின் அரசாங்கத்தை அவர்கள் பாதுகாத்து வருகின்றனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேர்தலுக்கு பயப்படத் தேவையில்லை என்றாலும், இந்த சுயேச்சைக் குழுக்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் மிரட்டி வருகின்றன.

ரணிலுக்கும் , ரணிலின் அரசாங்கத்துக்கும் அவர்கள் கொடுத்த வேலை, தேர்தலுக்குச் செல்லாமல் இருக்க காய்களை நகர்த்துவதைத்தான்.

அவர்கள் தேர்தலைக் கண்டு பயப்படுவதற்குக் காரணம், இன்னும் அவர்களது கட்சி தேர்தலுக்கு தயாராகாததால் அல்ல. ராஜபக்சக்களின் குடும்பத்தினர் தாங்கள் நிரபராதிகள் என்று எவ்வளவோ சொல்லிக் கொண்டாலும், மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற அச்சமும், சந்தேகமும் அவர்களுக்குள் இருப்பதுதான்.

இதே கூட்டம்தான் ராஜபக்சக்களை தோளில் சுமந்தவர்கள். போராட்டத்திற்கு முன்பு ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவரும் ராஜபக்சக்களால்தான் சூரியன் உதிக்கின்றது என்றனர். ராஜபக்சக்களுக்கு ஆடையின்றி பிரசாரம் செய்ய சென்றவர்கள்.

இவைகளை மக்கள் அறியாதவர்கள் அல்ல.

அன்று ராஜபக்சக்களுக்கு வாக்களிக்காதீர்கள், ராஜபக்சக்களை தோற்கடியுங்கள், ராஜபக்சக்கள் மீண்டும் வந்தால் நாட்டை அழிப்பார்கள் என்று இரண்டு கட்சிகள் மட்டுமே கூறின.

அவை ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி. ஆகிய இரு கட்சிகள் மட்டுமேயாகும்.

இதில் ராஜபக்சக்களுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்திருந்தனர்.

சஜித் பிரேமதாச 2019 ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்சக்களுக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களில் ஒருவராவார்.

அப்போது விமலின் குழுவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், விஜயதாஸ ராஜபக்ச, அனுர பிரியதர்ஷன யாபா, டலஸ் அலகபெரும என அனைவரும் ராஜபக்சவின் பக்கம் நின்றார்கள்.

2020 பொதுத் தேர்தலில் ராஜபக்சவை தோற்கடிக்க சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி நினைத்த போது, ​​ ராஜபக்ஷக்களை பலப்படுத்த எங்களை பாராளுமன்றத்திற்கு அனுப்புங்கள் என்றவர்கள் மேலே குறிப்பிட்டோராகும்.

2020 இல் பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மை அரசாங்கத்தை அமைத்திருந்த போது, சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தியும் , ஜே.வி.பியும் மட்டுமே 20வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று எதிர்த்தன.

எது எப்படி இருந்தாலும் மைத்திரிபால கூட 20க்கு கையை தூக்கவில்லை. ஒதுங்கிக் கொண்டார்.

கோவிட் வந்த ஆரம்ப காலத்தில் , முகமூடியும் தடுப்பு ஊசியும் தேவை என்று சஜித் கூறியபோது, ​​ராஜபக்சக்கள் சஜித்தை பைத்தியக்காரன் என்று கூறினர், ​​அதை சுயாதீன குழுவினர் எனப்படுவோர் கைதட்டி நையாண்டி செய்தனர்.

பெரும் பணக்காரர்கள் மீதான வரி நீக்கம் குறித்து சஜித் கேள்வி எழுப்பிய போது, ​​ராஜபக்சக்களது அருமையான திட்டம் என அனைவரும் ஆரவாரம் செய்து ஆதரித்தனர்.

சர்வதேச ரேட்டிங் ஏஜென்சிகள் இலங்கையை பொருளாதார ரீதியில் தரம் தாழ்த்திய போது, ​​சஜித்துக்கு ஆங்கிலம் புரியவில்லை என்று ராஜபக்சக்கள் திட்டியதும் இதே சுயேச்சைக் குழுக்கள்தான்.

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு வருவதற்கு முன்னர் சஜித்தின் ஆதரவாளர்கள் ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டனர்.

போராளிகள் கோட்டாவின் மிரிஹானாவைச் சுற்றி வளைப்பதற்கு முன், கோட்டாவின் மிரிஹானாவை ஹிருணிகா மற்றும் பிற பெண் அமைப்பில் உள்ள பெண்கள் சுற்றி வளைத்தனர்.

சஜித் தரப்பு ‘சேர் பெயில்’ என நாடு முழுவதும் கேட்க கோசமிட்டனர்.

இன்று மாவீரர்களைப் போல் கூச்சல் போடும் சுயேட்சைக்குழு ராஜபக்சக்களின் மடிகளில் வீழ்ந்து ராஜபக்சவை யாராலும் அழிக்க முடியாது என்று கணித்து பரப்புரை செய்தவர்கள்தான்.

இன்று இவர்கள் அனைவரும் பொதுஜன பெரமுனவில் இருந்து வெளியே வந்து சஜித் சரி என அல்ல , நாங்கள்தான் சரி என்று கூறுகின்றனர்.

பொதுஜன பெரமுனவில் இருந்த ஆதரவாளர்கள் , மொட்டு கட்சியை தவிர்த்து தங்களை ஆதரிப்பார்கள் என நினைக்கின்றனர்.

மக்கள் அவ்வளவு முட்டாள்கள் இல்லை.

1977 பொதுத்தேர்தலில் ,என்.எம்.பெரோரா, கொல்வின், பாவங்கள் அனைத்தையும் பண்டாரநாயக்காக்கள் தலையில் சுமத்திவிட்டு வெளியில் வந்து , நாங்கள் சுத்தமானவர்கள் என்றார்கள்.

அப்போதைய பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க பின்வாங்கி, அவர்களை முன்னேற அனுமதித்தது.

அப்போது ஜே.ஆர் பலவீனமானவராக இருந்தார்.

என்.எம்.பெரேரா, கொல்வின் ஆகியோர் எதிர்க்கட்சிகளின் பிரபலமான நட்சத்திரங்களாக இருந்தனர்.

தேர்தல் வந்தது.

என்.எம்., கொல்வின் எல்லோரும் இல்லாமல் போனார்கள்.

ஜே.ஆரின் தலைமையிலான ஐ.தே.க அபார வெற்றி பெற்றது.

காரணம், இப்படியெல்லாம் பாவங்களையெல்லாம் கழுவிவிட்டு சுத்தமானவனாக முடியாது என்ற செய்தியை மக்கள் என்.எம்., கொல்வின், பண்டாரநாயக்கா போன்றவர்களுக்குக் கற்றுக் கொடுத்தனர்.

என்எம் மற்றும் கொல்வினது இடதுசாரி ஐக்கிய முன்னணி ஒன்றை அன்று உருவாக்கியிருந்தனர். அது இலங்கை வரலாற்றில் இடதுசாரி கட்சிகளால் உருவாக்கப்பட்ட ஒரு வரலாற்று முன்னணியாகும்.

‘நீங்களும் பண்டாரநாயக்காவும் சேர்ந்து எங்களை நாசமாக்கினீர்கள்’ அதற்கான தண்டனைதான் இது என 1977 தேர்தலில் மக்கள் அவர்களுக்கு உணர்த்தினர்.

அடுத்த தேர்தலிலும் சுயேச்சைக் குழுக்கள் இதே போல ஒரு பாடத்தைத்தான் கற்கப் போகிறார்கள்.

எவ்வாறாயினும், இந்த சுயாதீன குழுக்களின் உறுப்பினர்கள் தங்கள் பாவங்களுக்குப் பரிகாரம் செய்து, தங்கள் பதவிகளைக் காப்பாற்ற விரும்பினால், அவர்கள் ஐக்கிய மக்கள் சக்தி அல்லது ஜே.வி.பி.யில் இணையலாம்.

ரொனி டி மெல் 1970 இல் பாராளுமன்றத்திற்கு வந்தது பண்டாரநாயக்காக்களுக்காக கடை விரித்து , அவர்களுக்கு வால் பிடித்துதான்.

ஆனால் சரியான நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து 1977 இல் வெற்றி பெற்றார்.

அடுத்த தேர்தலில் ராஜபக்சவினர் தேர்தலில் போட்டியிட வந்தாலும், வராவிட்டாலும், ராஜபக்சவுக்கு சார்பான, ராஜபக்சவுக்கு எதிரான குழு எனத்தான் மக்கள் கோடு போட்டு இரண்டு பிரிவினராக பிரிப்பார்கள்.

இதற்கு மிகச் சிறந்த உதாரணம் 1994 பொதுத் தேர்தல்.

1993 ஆம் ஆண்டு பிரமதாச படுகொலை செய்யப்பட்டு விஜேதுங்க ஜனாதிபதியான போது, ​​பிரமதாச எதிர்ப்புக்கள் முடிவுக்கு வந்ததனால் , அன்றைய மக்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என விஜேதுங்க நினைத்தார்.

பிரேமதாசாவின் எதிர்ப்பைத் தூண்டிய காமினியின் ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி (UNF), ஐ.தே.கயுடன் இணைந்திருந்தது.

ஆனால் மக்கள் ஐ.தே.க. மற்றும் ஐதேக எதிர்ப்பு பிரிவு என இரு பிரிவுகளாக பிரித்தனர் .

எனவே மக்கள் ஐ.தே.க.வையும் பிரேமதாச சார்பாளர்களையும் ஒரே குவியலில் போட்டார்கள், இரண்டு குவியலும் இரண்டல்ல. ஒன்றே என முடிவு செய்தனர்.

1977ல் நடந்த தேர்தலில் ஐ.தே.கவுக்கு எதிராக மோதிய , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மக்கள் வாக்களித்து வெற்றி வாய்ப்பை வழங்கினர்.

அடுத்த தேர்தலிலும் இதுபோலத்தான் நடக்கும்.

ராஜபக்சவினரோடு இணைந்திருந்த அனைவரும் என்ன வேடம் போட்டாலும் மக்களால் எறியப்படுவார்கள்.

– உபுல் ஜோசப் பெர்னாண்டோ
தமிழில் : ஜீவன்

Leave A Reply

Your email address will not be published.