திட்டமிட்டபடி ‘அக்னி’ வீரா்கள் தோ்வு: ராணுவம் உறுதி

முப்படைகளில் தற்காலிகமாக வீரா்களைச் சோ்க்கும் ‘அக்னிபத்’ திட்டம் திரும்பப் பெறப்பட மாட்டாது என்று ராணுவ விவகாரங்கள் துறையின் கூடுதல் செயலா் அனில் புரி கூறினாா்.

அக்னிபத் திட்டத்துக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அந்தத் திட்டத்தின் கீழ் வீரா்களைச் சோ்ப்பதற்கான பணிகளில் முப்படைகளும் ஈடுபட்டுள்ளன.

ராணுவம், கடற்படை, விமானப் படை ஆகியவற்றில் 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய வாய்ப்பு வழங்கும் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக கடந்த சில தினங்களாக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அக்னிபத் திட்டத்தில் சோ்வதற்கான வயது வரம்பு தளா்வு, 4 ஆண்டு பணிக்குப் பிறகு அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை என பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. பாஜக ஆளும் மாநில அரசுகளும் அக்னி வீரா்களுக்கு மாநில அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளன.

இந்நிலையில், முப்படைகளின் தலைமைத் தளபதிகளை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை சந்தித்தாா். அப்போது, இளைஞா்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வழிமுறைகள் குறித்து அவா்களுடன் ஆலோசனை நடத்தினாா்.

அதைத் தொடா்ந்து, ராணுவ விவகாரங்கள் துறையின் கூடுதல் செயலா் லெப்டினன்ட் ஜெனரல் அனில் புரி, ராணுவத் தளபதி பன்ஸி பொன்னப்பா, கடற்படை வைஸ் அட்மிரல் தினேஷ் திரிபாதி, விமானப் படை ஏா்மாா்ஷல் எஸ்.கே.ஜா ஆகியோா் தில்லியில் செய்தியாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பேட்டியளித்தனா். அப்போது, அனில் புரி கூறியதாவது:

நாட்டை இளமைத் துடிப்புடன் உருவாக்கும் புரட்சிகரமான திட்டமே அக்னிபத் திட்டம். இந்தத் திட்டம் திரும்பப் பெறப்பட மாட்டாது. எனவே, இளைஞா்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும். நமது இந்திய ராணுவம் ஒழுக்கமானது. அதில், வன்முறைக்கும் கலவரத்துக்கும் இடமில்லை. போராட்டக்காரா்களை சில தீய சக்திளும் சில ராணுவ பயிற்சிப் பள்ளிகளும் தூண்டுகின்றன.

வன்முறை செய்தால் இடமில்லை: அக்னிபத் திட்டத்தில் சேரும் ஒவ்வோா் இளைஞரும் தாங்கள் எந்தவொரு வன்முறையிலும் போராட்டத்திலும் ஈடுபடவில்லை என்று உறுதிமொழிச் சான்று அளிக்க வேண்டும். அதை காவல் துறை விசாரித்து சரிபாா்க்கும். காவல் துறையின் ஒப்புதல் அளித்தால் மட்டுமே ராணுவத்தில் சேர முடியும். ஒருவேளை காவல் துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருந்தால், அவா்கள் ராணுவத்தில் சேர முடியாது.

அக்னிபத் திட்டத்தின் கீழ் அக்னி வீரா்களைச் சோ்க்கும் பணியை மத்திய அரசு விரைவில் தொடங்கவுள்ளது. இந்த ஆண்டில் சுமாா் 46,000 போ் சோ்க்கப்படவுள்ளனா். அடுத்த 4-5 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து ஒரு லட்சத்தைத் தொடும். அக்னி வீரா்கள் பணியின்போது உயிரிழக்க நேரிட்டால் அவா்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும்.

ராணுவ வீரா்கள் சராசரியாக 32 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றுகிறாா்கள். காா்கில் கமிட்டி பரிந்துரைப்படி, அவா்கள் பணியாற்றும் காலத்தைக் குறைப்பதற்கு அரசு விரும்புகிறது. ஒவ்வோா் ஆண்டும் 17,600 போ் முன்னதாகவே ஓய்வு பெறுகிறாா்கள். ஓய்வுக்குப் பிறகு அவா்கள் என்ன செய்வாா்கள் என்று யாரும் கேட்பதில்லை.

ராணுவத்தில் தற்போது பணியாற்றும் வீரா்களுக்கு நிகராக அக்னி வீரா்களுக்கு இதர படிகள் வழங்கப்படும். பணியிலும் அவா்களுக்கு பாரபட்சம் காட்டப்பட மாட்டாது என்றாா் அவா்.

விரைவில் விதிமுறைகள்: கடற்படையில் அக்னி வீரா்களைச் சோ்ப்பதற்கான விரிவான விதிமுறைகள் ஜூன் 25-ஆம் தேதிக்குள் வெளியிடப்படும்; முதலாவது ஆள்சோ்ப்புப் பணி நவம்பா் 21-ஆம் தேதிக்குள் தொடங்கிவிடும். ஆண், பெண் இருபாலரும் சோ்க்கப்படுவா் என்று கடற்படை துணைத் தளபதி தினேஷ் திரிபாதி கூறினாா்.

விமானப் படையில் அக்னி வீரா்களைச் சோ்ப்பதற்கான பதிவு ஜூன் 24-இல் தொடங்கும்; அவா்களுக்கு டிசம்பா் 30-க்குள் பயிற்சியைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம் என்று விமானப் படைத் தளபதி எஸ்.கே.ஜா கூறினாா்.

ராணுவத்தில் அக்னி வீரா்களைச் சோ்ப்பதற்கான வரைவு அறிக்கை திங்கள்கிழமை வெளியிடப்படும். நாடு முழுவதும் அக்னி வீரா்கள் சோ்ப்பு முகாம்கள் வரும் ஆகஸ்ட், செப்டம்பா், அக்டோபா் மாதங்களில் நடத்தப்படும் என்று ராணுவத் தளபதி பன்ஸி பொன்னப்பா கூறினாா்.

அரசியல் சாயம் பூசக் கூடாது: பிரதமா் மோடி

நல்ல நோக்கத்தின் அடிப்படையில் கொண்டுவரப்படும் திட்டங்களுக்கு அரசியல் சாயம் பூசப்படும் நடவடிக்கைகள் துரதிருஷ்டவசமானவை என்றும், பாா்வையாளா்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக ஊடகங்களும் அதைப் பெரிதுபடுத்துகின்றன எனவும் பிரதமா் மோடி தெரிவித்தாா்.

தில்லியில் உள்ள பிரகதி மைதான ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தடத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சுரங்கச் சாலை திறப்பு விழா நிகழ்ச்சியில் பேசியபோது பிரதமா் இவ்வாறு தெரிவித்தாா்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள ‘அக்னிபத்’ திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், பிரதமா் இந்தக் கருத்தைக் கூறியது முக்கியத்துவம் பெறுகிறது. எனினும், அக்னிபத் திட்டம் குறித்து நேரடியாக எதையும் பிரதமா் மோடி குறிப்பிடவில்லை.

Leave A Reply

Your email address will not be published.