கந்தக்காடு விரைகின்றது மனித உரிமை ஆணைக்குழு – 73 பேர் இதுவரை சிக்கவில்லை.

பொலனறுவை மாவட்டத்திலுள்ள வெலிக்கந்தை – கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இடம்பெற்ற மோதல் நிலை குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைக் குழு இன்று அங்கு செல்லவுள்ளது.

குறித்த மோதல் சம்பவம் தொடர்பிலும், தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பிலும், விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற மோதல் சம்பவத்தை அடுத்து, அங்கு தடுத்துவைக்கப்பட்டிருந்த 998 கைதிகளில் 726 பேர் மறுநாள் புதன்கிழமை அதிகாலை தப்பிச் சென்றிருந்தனர்.

இதையடுத்துப் பாதுகாப்புத் தரப்பினர் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கைகளில் 653 பேர் மீளவும் பொறுப்பேற்கப்பட்டதுடன், 73 பேர் தொடர்ந்தும் தேடப்படுகின்றனர்.

பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினர் தொடர்ந்தும் தேடுதல்களை முன்னெடுத்து வருகின்றனர் என்று புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் உள்ளக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.