“ஔசதா” எனும் புதிய குரக்கன் இனம் அறுவடை விழா.

கிளிநொச்சி மாவட்டத்தில் அறுவடை விழா தற்காலத்தில் சிறுதானியங்களுக்கான பயிற்செய்கையானது விவசாயிகளிடையே அருகிவரும் நிலையில் காணப்படுவதால் சிறுதானிய பயிர் செய்கையினை ஊக்குவிக்க வேண்டிய கட்டாய நிலைகுள் நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.
இதனை அடிப்படையாகக் கொண்டும் COVID -19 தாக்கத்திற்கு பிற்பாடு எழக்கூடிய உணவு பாதுகாப்பினை எதிர்கொள்ளும் முகமாகவும் கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுதானிய பயிற்சியானது விவசாயிகளிடையே ஊக்குவிக்கப்பட்டு பிரபல்யம் அடைந்து வருகிறது.
குறைந்தளவான நீர், பசளை மற்றும் நோய் தாக்கத்துடனும் கூலியாட் செலவுடனும் வெற்றிகரமாக பயிர் செய்யக்கூடிய சிறுதானிய பயிர்களில் ஒன்றான குரக்கன் செய்கையினை ஊக்குவிப்பதற்கு கிளிநொச்சி மாவட்டத்தின் மீண்டும்வரும் செலவினத்தில் 30 பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கு “ஔசதா” எனும் புதிய குரக்கன் இனம் இவ்வாண்டு சிறுபோகத்தில் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
இதேபோன்று சௌபாக்கியம் திட்டத்தினூடாகவும் 45 பயனாளிகளுக்கு குரக்கன் விதைகள் வழங்கிவைக்கப்பட்டது தொழில்நுட்ப ஆலோசனைகளும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் மூலமாக வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
விதை மானியத் திட்டத்தின் ஊடாகவும் சுமார் 21 ஏக்கர் விஸ்தீரணத்தில்  செய்கை பண்ணப்பட்ட குரக்கனில் இருந்து பெறக்கூடிய குரக்கன் மாவானது  இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவினை விட அதிக நார்ப்பொருட்கள் மற்றும் அதிகளவான கல்சியம், இரும்புச் சத்துக்களை உள்ளடக்கியுள்ளதால் குரக்கன் மாவினை உட்கொள்வது உடல் நலத்திற்கும் மிகவும் சிறப்பானதாகும்.
சிறுதானியங்களில் சிறப்புவாய்ந்த  குரக்கன் பயிர்ச்செய்கையின் அறுவடை விழாவானது பிரதேச விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் முகமாக கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் பொ. அற்புதச்சந்திரன்  தலைமையில் அம்பாள் குளம் விவசாய போதனாசிரியர் பிரிவில் செல்வா நகர் கிராமத்தில் ம.இராஜகோபால் எனும் பயனாளியின் தோட்டத்தில் 19.08.2020 ஆந் திகதி இடம்பெற்றது.
சிறப்பாக நடைபெற்ற இவ்விழாவிற்கு பிரதம அதிதியாக மாவட்டச் செயலாளரும், அரசாங்க அதிபருமான திருமதி ரூபவதி கேதீஸ்வரன்  சிறப்பு அதிதிகளாக பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் மேலதிகப் பணிப்பாளர் கலாநிதி எஸ்.ஜே.அரசகேசரி மாவட்ட விவசாய பணிப்பாளர், பிரதி விவசாயப் பணிப்பாளர்( விதை நடுகை பொருட்கள்), விவசாய கல்லூரி அதிபர் உதவி விவசாய பணிப்பாளர்( விதைகள் ஆய்வுகூடம்), மற்றும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகளும் எனப்பலரும் கலந்துகொண்டு இவ்விழாவினை சிறப்பித்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.