அதிமுக அலுவலகம் யாருக்கு சொந்தம்? ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு நேரில் ஆஜராக நோட்டீஸ்

சென்னை ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை ஏற்பட்ட வன்முறை சம்பவத்தை தொடர்ந்து அலுவலகத்திற்கு பூட்டு போடப்பட்டு சீல் வைக்கப்பட்டதூ. இந்நிலையில், தலைமை அலுவலகம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை முடிவு செய்ய இருதரப்பினரும் வருகிற 25ஆம் தேதி ஆஜராகும்படி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு வருவாய் கோட்ட அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஒற்றைத்தலைமை மோதலுக்கு மத்தியில் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த போது, அவரது ஆதரவாளர்களுக்கும், ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. ஓபிஎஸ் வாகனம் அவ்வை சண்முகம் சாலை அருகே வருவதை அறிந்து, அங்குள்ள இந்தியன் வங்கி அருகே ஈபிஎஸ் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் குவிந்தனர். குப்பை தொட்டிகளை சாலையின் குறுக்கே இழுத்து வைத்ததுடன் ஓபிஎஸ் வருகையை கண்டித்து முழக்கமிட்டனர்.

இதனால், ஓபிஎஸ்-ன் வாகனம் சாலையிலேயே நிறுத்தப்பட்ட நிலையில், நாற்காலிகளை தலைக்கவசமாக பயன்படுத்தி எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கல் வீச்சிலும் ஈடுபட்டனர். இதனிடையே, ஓபிஎஸின் வாகனத்திற்கு முன்பாக வந்த ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் மீது பதிலடியாக கற்களை வீசியதால் அந்த இடமே போர்க்களமானது. அதிமுக கொடிகளை ஏந்தி, தலைக்கவசம் அணிந்து முகத்தை மறைத்தும் சிலர், சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த கார்கள், பேருந்துகள் போன்றவற்றை அடித்து நொறுக்கினர்.

எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் பின்வாங்கிய நிலையில், பூட்டப்பட்டு இருந்த அதிமுக தலைமை அலுவலக கதவினை ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் உடைத்தனர். அவர்களை தொடர்ந்து அங்கு வந்த ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மரியாதை செலுத்தினர். பின்னர் சில மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து, அங்கு வந்த வருவாய் கோட்டாட்சியர் சாய் வர்தினி உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை வெளியேறுமாறு அறிவுறுத்தினர். பின்னர், வெளியே வந்த ஓபிஎஸ் சிறிது நேரம் தர்ணாவில் ஈடுபட்டார்.அவர் அங்கிருந்து புறப்பட்டதும், வருவாய்த்துறை அதிகாரிகள் அதிமுக அலுவலகத்திற்கு பூட்டு போட்டு சீல் வைத்தனர். அதிமுக தலைமை அலுவலகம் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 146-ன் கீழ் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

வில்லங்கம் இருப்பதாக கருதப்படும் சொத்துக்கள் தான் 146 பிரிவின் கீழ் முடக்கப்படும். அந்த வகையில், ஒரு சொத்துக்கு இரு தரப்பினர் சொந்தம் கொண்டாடும் நிலையில் வருவாய் துறை அதிகாரிகளால் முடக்கப்படும்.இதை பின்பற்றியே தற்போது அதிமுக தலைமை அலுவலகம் முடக்கப்பட்டுள்ளது.

சீல் வைக்கப்பட்டதை அகற்றுவதற்கு, நீதிமன்றத்தை நாடி தீர்வு காணுவது தான் ஒரே வழி என்று கூறப்படுகிறது.

தற்போது, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தின் பொறுப்பாளராக மயிலாப்பூர் வட்டாட்சியர் நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை அலுவலகம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை முடிவு செய்ய இருதரப்பினரும் வருகிற 25ஆம் தேதி ஆஜராகும்படி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற மோதல் தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், இருதரப்பினர் மற்றும் காவலர்கள் என மொத்தம் 47 காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் வகையில் இபிஎஸ், ஓபிஎஸ்சின் வீடுகளுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.