விண்ணில் பாய்ந்தது எஸ்எஸ்எல்வி ராக்கெட்

புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோளான இஓஎஸ்-02 உடன் எஸ்எஸ்எல்வி ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் ஏவப்பட்டது.

இதில், அரசுப் பள்ளி மாணவிகள் சேர்ந்து உருவாக்கிய ஆசாதிசாட் (8 கிலோ) எனும் கல்விசாா் செயற்கைக்கோளும் விண்ணில் செலுத்தப்பட்டது.

அதிகாலை 3.18 மணிக்கு தொடங்கிய 6 மணி நேர கவுன்டவுன் முடிந்ததைத் தொடர்ந்து இரண்டு செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டது.

144 கிலோ எடை கொண்ட இஓஎஸ்-02 செயற்கைக்கோள் புவி கண்காணிப்புக்கு பயன்படுத்தப்படவுள்ளது. இதேபோன்று 8 கிலோ எடை கொண்ட ஆசாதிசாட் செயற்கைக்கோளில் சோலார் பேனல்களை படம்பிடிக்கும் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

தகவல்தொடா்பு, தொலையுணா்வு மற்றும் வழிகாட்டி செயற்கைக்கோள் திட்டங்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயல்படுத்தி வருகிறது. அதற்காக, பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி போன்று முதல்முறையாக எஸ்எஸ்எல்வி வகை ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 1,750 கிலோ வரையும், ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 4,000 கிலோ வரை எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த முடியும். ஆனால், எஸ்எஸ்எல்வி மூலம் 500 கிலோ வரையிலான செயற்கைக்கோள்களை மட்டுமே விண்ணில் செலுத்த இயலும்.

Leave A Reply

Your email address will not be published.