முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது – கேரள முதல்வர் கடிதத்திற்கு மு.க.ஸ்டாலின் பதில்

முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக இருப்பதாகவும், விதிகளின்படியே அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதாகவும், முதலமைச்சர் ஸ்டாலின் கேரள முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

முல்லை பெரியாறு அணைக்கு அருகில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என, கேரள முதலமைச்சர் கடந்த 5ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார். இதனை குறிப்பிட்டு, ஸ்டாலின் பதில் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், கடந்த 4ம் தேதி அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியபோது, தண்ணீர் திறக்கப்படுவது தொடர்பாக கேரள அதிகாரிகளுக்கும், இடுக்கி மாவட்ட நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். அதைதொடர்ந்தே, 5ம் தேதியன்று தண்ணீர் திறந்து விடப்பட்டதாக கூறியுள்ளார்.

8ம் தேதி இரவு 7 மணி நிலவரப்படி முல்லை பெரியாறு அணையில் 138.85 கன அடி நீர் இருப்பதாகவும், அணைக்கு விநாடிக்கு 6 942 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதகாவும், 5000 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாகவும் பதிலளித்துள்ளார்.

முல்லை பெரியாறு அணைக்கு அருகில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, அணை நிர்வாகக் குழு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கேரள அதிகாரிகளுக்கு தொடர்ந்து தகவல் அளிக்க, முல்லை பெரியாறு அணை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாக கூறியுள்ளார்.

முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாகவும், கேரள முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.