அதிமுக பொதுக்குழு முடிவை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு : உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பிறப்பித்த உத்தரவில், தனக்கு எதிராக சில கருத்துக்களை தெரிவித்திருந்ததால், அதுதொடர்பான வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தலைமை நீதிபதிக்கு மனு அளிக்கப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, இந்த செயல் நீதித்துறையை களங்கப்படுத்துவது என பன்னீர்செல்வம் தரப்புக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கண்டனம் தெரிவித்திருந்தார்.

பின்னர், தலைமை நீதிபதியிடம் முறையிட்டதற்கு மன்னிப்பு கோரிய பன்னீர்செல்வம் தரப்பு, ஏற்கனவே இரு முறை இந்த வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்து தீர்ப்பளித்துள்ளதால் மற்றொரு நீதிபதி புதிதாக விசாரணை நடத்துவதே முறையாக இருக்கும் எனவும், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமிக்கு எதிராக எந்த குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை எனக் கூறி, தலைமை நீதிபதியிடம் அளித்த மனுவை திரும்பப் பெற்று மனுவாக தாக்கல் செய்யப்பட்டது.

எடப்பாடி பழனிச்சாமி தரப்பில், எந்த நீதிபதி முன்பும் வாதங்களை முன்வைக்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பன்னீர்செல்வம் தரப்பு தாக்கல் செய்த இந்த மனுவை பதிவு செய்து கொண்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ஏற்கனவே இரண்டு முறை இந்த விவகாரத்தை விசாரித்து, கருத்தை வெளிப்படுத்தி, உத்தரவுகளை பிறப்பித்து உள்ளதாக மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தின்படி, இந்த விவகாரத்தை தலைமை நீதிபதியின் பரிசீலனைக்கு வைப்பதே பொருத்தமானது எனக் கருதுவதால், இந்த வழக்குகளை புதிதாக விசாரிக்க நீதிபதியை நியமிக்கும் வகையில் வழக்குகளை தலைமை நீதிபதி முன் சமர்ப்பிக்கும்படி, பதிவுத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பரிந்துரையை ஏற்ற தலைமை நீதிபதி, அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளை விசாரிக்க நீதிபதி ஜி.ஜெயச்சந்திரனை நியமித்திருந்தார். இந்த வழக்குகள் கடந்த திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தபோது, தங்கள் தரப்பு மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் ஆஜராகததால் வழக்கை தள்ளி வைக்க வேண்டும் என ஓ.பி.எஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்ப்ட்டது. இதனை ஏற்ற நீதிபதி வழக்கை தள்ளி வைத்திருந்தார். அதன்படி வழக்கு இன்று பிற்பகல் 2:15 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.