தொடர்ந்து 12வது நாளாக ஏறுமுகத்தில் கொரோனா தொற்று… டெல்லியில் தற்போதைய நிலவரம் என்ன?

புதுடெல்லி: தொடர்ந்து 12ஆவது நாளாக தலைநகர் டெல்லியில் ஒரு நாளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதார துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், டெல்லியில் 2,162 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மேலும் 5 பேர் வைரஸ் நோயால் உயிரிழந்துள்ளனர்.

அது மட்டுமின்றி, கடந்த 13-ம் தேதி டெல்லியில் கொரோனா நோய் காரணமாக 9 பேர் உயிரிழந்துள்ளனர். 2,031 பேர் இந்நோய்க்கு புதிதாக பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த 11-ம் தேதியன்று 8 இறப்புகள் பதிவாகின. இது கிட்டத்தட்ட 180 நாட்களில் இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாகும். மேலும் அன்று மட்டும் 2,146 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியானது. இதற்கு முன், பிப்ரவரி 13-ம் தேதி கொரோனா நோயால் 12 இறப்புகளை டெல்லி பதிவு செய்தது.

ஆகஸ்ட் 9-ம் தேதி அன்று டெல்லியில் 2,495 பேருக்கு கொரோனா பாதிப்பு மற்றும் 7 இறப்புகள் பதிவானது. அதுமட்டுமின்றி, டெல்லியில் கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி அன்று 1,372 புதிதாக நோய்த்தொற்று பாதிப்புகள் மற்றும் 6 இறப்புகள் பதிவாகின. இது ஜனவரி 21-க்கு பிறகு பதிவான அதிகபட்ச எண்ணிக்கை என சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

நோய்த்தொற்றுகள் பாதிப்பு, இறப்புகளுடன், டெல்லியில் மொத்த பாதிப்பு 19,84,595 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 26,381 ஆகவும் உயர்ந்துள்ளது.

அரசு வெளியிட்ட அறிக்கையின்படி, டெல்லியில் ஆக்டிவ் கொரோனா தொற்றின் எண்ணிக்கை 8,430ஆக உள்ளது. மேலும், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 5,734ஆக உள்ளது என தெரிவித்துள்ளது. நகரங்களில் மொத்தம் 326 கட்டுப்பாட்டு மண்டலங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுநோயின் மூன்றாவது அலையின் போது இந்த ஆண்டு ஜனவரி 13 அன்று டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 28,867ஆக உயர்ந்தது. ஜனவரி 14 அன்று நகரத்தில் 30.6 சதவீதமாக பாதிப்பு பதிவு செய்யப்பட்டது, இது தொற்றுநோயின் மூன்றாவது அலையின் போது ஏற்பட்ட மிக அதிகமான பதிவு ஆகும். ஆனால், தற்போது, ஆகஸ்ட் 11 அன்று 180 நாட்களுக்குப் பின் 17.83 சதவீதமாக பாதிப்பு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு கணிசமாக குறைந்து வரும் நிலை காணப்படுகிறது. தமிழகத்தில் நேற்று புதிதாக 759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும், இதனால், இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 லட்சத்து 58 ஆயிரத்து 788ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 147 பேருக்கு நேற்று தொற்று உறுதியாகியிருக்கிறது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35 லட்சத்து 13 ஆயிரத்து 349ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் 7 ஆயிரத்து 406 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.