மக்களின் பிரச்சினையை உடனடியாகத் தீர்க்க கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் ரணிலைப் பற்றி எனக்குத் தெரியும்; என்னைப் பற்றி அவருக்குத் தெரியும்.

“நாட்டின் தற்போதைய நிலைமையில் அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் தங்களது கட்சிகள் தொடர்பான நிலைப்பாட்டை ஒதுக்கிவைத்துவிட்டு மக்களின் பிரச்சினைகளை உடனடியாகத் தீர்ப்பதற்காக ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டியது அவசியமாகும்.”

இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஊடகங்களிடம் அவர் கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டின் பொருளாதார நெருக்கடி நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளிலேயே அதிகளவு தாக்கம் செலுத்தியுள்ளது.

பொருளாதார நெருக்கடி கிராமப்புர பிரதேசங்களில் தாக்கம் செலுத்தாமல் இல்லை.

கிராமங்களை எடுத்துக்கொண்டால் விவசாயக் காணிகளில் இருப்பவற்றைப் பறித்து சமைத்து உண்ணும் வாய்ப்பு கிராம மக்களுக்கு இருக்கின்றது. நகரப்புறங்களில் அவ்வாறு இல்லை.

எனவே, நாட்டின் பொருளாதாரம் பாரியளவு வீழ்ச்சியடைந்துள்ளது. கல்வித்துறையும் வீழ்ச்சியடைந்துவிட்டது. சுகாதாரத்துறையை எடுத்துக்கொண்டால் போதிய மருந்துகள் இல்லை.

வெளிநாடுகளிடமிருந்து மருந்துகளை விலைக்கேனும் கொள்வனவு செய்ய முடியும். ஆனால், விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் குடும்பத்துடன் நாட்டைவிட்டு வெளியேறுவது என்பது தீவிரமான நிலைமையாகும்.

நாட்டில் அத்தியாவசிய சேவையை ஆற்றிவந்தவர்களே இவ்வாறு நாட்டிலிருந்து வெளியேறிவருகின்றனர்.

கடந்த இரண்டரை வருடங்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தங்களது குடும்பத்தாருடன் வெளியேறி வருகின்றனர்.

நாட்டில் மகிழ்ச்சியடைக்கூடிய விடயங்கள் என்று கூறிக்கொள்வதற்கு ஒன்றும் இல்லை.

அரசு முன்னெடுக்கும் சிறந்த விடயங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவே நாட்டின் தற்போதைய ஜனாதிபதிக்கு நாங்கள் தெரிவித்துள்ளோம்.

நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள், உணவுத் தட்டுப்பாடு, வாழ்வாதார செலவீனம், எரிபொருள் பிரச்சினை, எரிவாயு பிரச்சினை, பொருட்களின் விலை அதிகரிப்பு, விவசாயிகள் எதிர்கொண்டுள்ள உரப்பற்றாக்குறை, அதேபோன்று ஏனைய தொழிற்றுறை சார்ந்தோர் எதிர்கொண்டுள்ள பிரச்சினை இவற்றுக்கு எதிராக முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படுமாயின் நாம் அவற்றுக்கு எமது பூரண ஒத்துழைப்பை வழங்குவோம் என்று கூறியுள்ளோம்.

நாங்கள் உடன்படாத விடயங்கள் அரசால் முன்னெடுக்கப்பட்டால் அதற்கு எதிர்ப்பை தெரிவிப்போம் என்றும் நாம் கூறியுள்ளோம்.

புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் நானும் ஐந்து வருடங்கள் ஒன்றாகப் பணியாற்றியுள்ளோம். எனவே, அவரைப் பற்றி எனக்கு நன்கு தெரியும். என்னைப் பற்றி அவருக்கு நன்கு தெரியும்.

நாடு தற்போது எதிர்கொண்டு இருக்கும் நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் அரசியல்வாதிகளின் கடந்த காலங்களை விமர்சிப்பது அவசியமற்ற ஒரு விடயமாகும்.

அரசியல் கட்சிகள் பற்றி ஆராய்ந்து பார்த்துக்கொண்டு இருக்க முடியாது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.