இந்தியாவில் 2030க்குள் 6ஜி சேவை: பிரதமர் மோடி அறிவிப்பு

2030க்குள் இந்தியாவில் 6ஜி அலைக்கற்றை சேவையை அறிமுகம் செய்யும் நோக்கில், அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 26-ஆம் தேதி 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் தொடங்கி ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை நடைபெற்றது. ரிலையன்ஸ் ஜியோ, பாா்தி ஏா்டெல், வோடஃபோன்-ஐடியா, அதானி நிறுவனம் ஆகியவை ஏலத்தில் பங்கேற்றன. இந்த ஏலத்தில், 5ஜி அலைக்கற்றையானது நிறுவனங்களுக்கு ரூ.1,50,173 கோடிக்கு ஏலம் விடப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஏா்டெல் நிறுவனம் 4 ஆண்டுகளுக்கான தவணை தொகையான ரூ.8,312.4 கோடியை முதல் தவணையாக செலுத்தியது. அதுபோல, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.7,864.78 கோடி, வோடஃபோன்-ஐடியா நிறுவனம் ரூ.1,679.98 கோடி, அதானி நிறுவனம் ரூ. 18.94 கோடியையும் முதல் தவணையாக செலுத்தின. இந்த மாத இறுதிக்குள் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் 5ஜி சேவையை ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், 2030க்குள் இந்தியாவில் 6ஜி அலைக்கற்றை சேவையை அறிமுகம் செய்யும் நோக்கில், அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2022 கிராண்ட் நிறைவு நிகழ்ச்சியில் காணொலி காட்சியின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். அப்போது, “வரும் 2030க்குள் 6ஜி சேவையை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறோம். கேமிங் மற்றும் பொழுதுபோக்கு சார்ந்து இந்திய அரசாங்கம் ஊக்குவிப்பு வழங்கி வருகிறது.

சில மாதங்களில், இந்தியா இறுதியாக 5ஜி சேவைகளை பெற முடியும், இருப்பினும், அறிமுகத்திற்கு முன்னதாக, வரும் 2030 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 6ஜி சேவைகளை அறிமுகப்படுத்த நாடு தயாராகி வருவதாக மோடி தெரிவித்தார்.

மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷணவ், “அக்டோபர் 12 ஆம் தேதிக்குள் 5ஜி சேவைகள் இந்தியாவில் அறிமுகமாகும்” என சூசகமாகத் தெரிவித்தர். மேலும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாட்டின் அனைத்து நகரம், கிராமம் என அனைத்து இடங்களிலும் 5ஜி சேவை கிடைக்கப்பெறலாம் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.