யானை வாலை பிடித்துக் கொண்டு வைகுண்டம் போக நினைக்கும் ராஜபக்சவினரும், அக்டோபர் புரட்சியும்!

ராஜபக்சவினரது மொட்டு கட்சியினர் நியமித்த ஜனாதிபதிதான் ரணில்.

ஜனாதிபதி ரணிலின் கன்னி வரவுசெலவுத்திட்டத்தை பாராளுமன்றத்தில் கேட்டுவிட்டு அங்கிருந்து மஹிந்த வெளியே வந்த போது,  ஊடகவியலாளர்கள் மஹிந்தவிடம் வரவு செலவு திட்டம் எப்படி என வினவினார்கள்.

அதை பற்றி வாயே திறக்காத மகிந்த , தனக்குப் பின்னால் வந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தை சுட்டிக்காட்டி,  அவரிடம் கேளுங்க எனக் கூறிவிட்டு மஹிந்த, வேக வேகமாக நடையைக் கட்டினார்.

மகிந்தவின் அரசியல் 50 வருடங்களுக்கும் மேலானது.

இந்த 50 வருடங்களில் மகிந்த அரசாங்கத்திலும் , எதிர்க்கட்சியிலும் இருந்து கொண்டு வரவு செலவுத் திட்டங்கள் குறித்து நல்லது – கெட்டதை ஆராய்ந்து மனதில் பட்டதை  கூறியுள்ளார்.

மகிந்தவின் 50 வருட அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக வரவு செலவுத் திட்டம் பற்றி ஒரு வார்த்தை கூட பேச முடியாத அளவிற்கு மகிந்த இன்று அனாதரவாக உள்ளார்.

கடந்த வாரம் 13 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய பேராசிரியர் ஜீ.எல். , மகிந்தவின் அநாதரவான நிலை குறித்து ஒரு கருத்தை தெரிவித்திருந்தார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலின் போது மொட்டுக் கட்சி தலைவர் மஹிந்தவுடன் நாடெங்கும் மேடைக்கு மேடை , நானும் மஹிந்தவும், பொதுஜன பெரமுனவினரும் சென்று மக்களிடம் கொடுத்த வாக்குறுதிகளை மாற்ற முடியாதுள்ளது. அதனாலேயே மகிந்த அநாதரவாகிவிட்டார் என்றார் ஜீ.எல்.

ஜி.எல்-ன் கருத்துபடி இன்று மகிந்த மட்டுமல்ல, பொதுஜன பெரமுனவுக்கு வாக்களித்த ஒவ்வொரு வாக்காளரும் கூட அநாதரவாகிவிட்டார்கள்.

‘பொது முன்னணியை ஆதரவற்றவர்களாக மாற்றியது யார்…?’

யானையின் வாலில் தொங்கி வைகுண்டம் செல்ல முயன்ற ராஜபக்ச குடும்பம்தான் பொதுஜன பெரமுனாவை அனாதரவாக ஆக்கியது.

‘சர்வதேச தொடர்புகளைக் கொண்ட, சர்வதேச நாணய நிதியத்துடன் பேசும் மொழியை அறிந்த, இந்த நெருக்கடியைத் தீர்க்கக்கூடிய சிறந்த நபர் ரணில். அதனால்தான் ரணிலுக்கு ஜனாதிபதி பதவியை தானமாக வழங்கினோம்…’

ரணிலுக்கு ஜனாதிபதி பதவி வழங்கியதற்கான காரணத்தை இவ்வாறுதான் நாமல் ராஜபக்ச நியாயப்படுத்தினார்.

அது என்ன பொய் கதை?

IMF உடன் பேச தகுதியான மொழி தெரிந்த மனிதர் ஜி.எல் .

ரணில் ஒரு வழக்கறிஞர் மட்டுமே.

ஜி.எல். ஒரு பேராசிரியர்.

ரணிலின் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்.

இந்த வேலையை மொட்டுக்குள்ளேயே தீர்க்கக் கூடிய  தகுதி வாய்ந்த மனிதர் எங்களிடம் இருந்தார்.  நாட்டைக் கட்டியெழுப்பவோ அல்லது மொட்டு கட்சியை மீட்கவோ ரணிலுக்கு ஜனாதிபதி பதவி கொடுக்கப்படவில்லை. மகிந்த குடும்பத்தைக் காப்பாற்றவே ரணிலுக்கு ஜனாதிபதி பதவி கொடுக்கப்பட்டது…’

இது ஒரு பழைய இடதுசாரி தலைவர் சொன்ன கதை.

கதை உண்மைதான்.

ஜி.எல். ஒரு சட்டப் பேராசிரியர்.

அவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ரோட்ஸ் ஸ்காலர் ஆவார்.

ஆக்ஸ்போர்டில் முனைவர் பட்டம் பெற ரோட்ஸ் உதவித்தொகையை பெற்றார்.

ஆக்ஸ்போர்டில் மட்டுமின்றி, புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றார்.

இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் ஜி.எல். போன்ற கல்வி கற்ற ஒரு அரசியல்வாதியும் இதுவரை இருந்ததில்லை. இலங்கையில் 6 வருடங்கள் இராஜாங்க நிதி அமைச்சராக தொடர்ந்து பதவி வகித்துள்ளார்.

சந்திரிகா , சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியை கையாள்வதில் ஜி.எல்லுக்கு இருந்த திறமை காரணமாக 1994 ஆம் ஆண்டு, ஜி.எல். பீரிசை  இராஜாங்க நிதி அமைச்சராக நியமித்தார்.

1995ஆம் ஆண்டு முதல் இலங்கையில் 6 வரவு செலவுத் திட்டங்களை தாக்கல் செய்த நிதியமைச்சர் ஜி.எல்.

IMF மற்றும் உலக வங்கி போன்ற சர்வதேச நிதி நிறுவனங்களை கையாண்ட பிறகே ஜி.எல் , அப்போதைய பட்ஜெட்டை முன்வைத்தார்.

ராஜபக்சவினரது புண்ணியத்தில் , ரணில் முதல் முறையாக நிதி அமைச்சரானார்.

1993, 2002, 2015 ஆகிய ஆண்டுகளில் ரணில் பிரதமராக இருந்த எந்தக் காலத்திலும் நிதியமைச்சகப் ரணில் பொறுப்பை ஏற்கவில்லை.

கோட்டாபய, ராஜபக்ச குடும்பம் மற்றும் மொட்டுதான் ரணிலை நிதி அமைச்சராக்கியது.

அப்படிப் பார்க்கும்போது, ​​நிதியமைச்சராக இருந்த ஜி.எல்.க்கு இருக்கும் அனுபவமும் பரீட்சையமும் ரணிலுக்கு இல்லை.

1994 பொதுத் தேர்தல் நேரத்தில், அமெரிக்கா உட்பட மேற்குலகின் தூதரகங்கள் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துடன் இணைந்திருந்தன.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஊடாக மோதல் தீர்க்கும் பாடநெறியைப் கற்ற பின்னர், ஜி.எல். கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவருடன் , அமெரிக்க மற்றும் மேற்கத்திய தூதரகங்களுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்திக் கொண்டார்.

அப்போது இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக டெரிஷிட்டா இருந்தார். ஜி.எல். அவருடன் நெருக்கமான நட்பை பேணினார்.

1994 பொதுத் தேர்தல்கள் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெற யூ.என்.பி. அரசாங்கத்தில் செல்வாக்கு செலுத்த ஜி.எல். , டெரிஷிட்டாவின் பலத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்திக் கொண்டார்.

சந்திரிக்காவுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக தேர்தல் தினத்தன்று அவருக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக, அமெரிக்க தூதரகத்தின் உதவியை ஜி.எல். பெற்றுக் கொடுத்தார்.

இலங்கையின் சமாதான நடவடிக்கையில் தலையிடுமாறு நோர்வேயை அழைத்தது கூட ஜி.எல்தான்.

ஜி.எல்.இன் மூலம் சர்வதேச உறவுகள் சந்திரிகாவின் அரசாங்கத்தை பலப்படுத்தும் என்பதை அறிந்த ரணில் ,  சந்திரிகாவின் அரசாங்கத்தில் இருந்து ஜி.எல்.யை பிரித்து தன் பக்கம் இழுத்துக் கொண்டார்.

2002ஆம் ஆண்டு ரணிலின் அரசாங்கத்தில் இணைந்த ஜி.எல். 2002 இலங்கைக்கு ஆதரவான ஒஸ்லோ மாநாட்டையும் ,

2003 இலங்கையை ஆதரித்த டோக்கியோ மாநாட்டையும் ஜி.எல்தான் ஒழுங்கு செய்தார்.

2015ஆம் ஆண்டு ரணில் பிரதமராக பதவியேற்றபோது இலங்கைக்கு ஆதரவாக ஒரு மாநாட்டைக் கூட ஏற்பாடு செய்யப்படவில்லை, ஏனென்றால் ரணிலின் அரசாங்கத்தில் ஜி.எல் போன்றவர்கள் இல்லாமல் போனதுதான் அதற்கு காரணம்.

1994 இல், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி  பலம் இழந்து போய் , ஐக்கிய தேசியக் கட்சி பெற்றிருந்த அமெரிக்க மேற்குலக ஆதரவை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பெறுவதற்கு , பின்னணியில் செயல்பட்டவர் ஜி.எல்..

ஆனால் சந்திரிகா அத்தனையையும் நாசமாக்கிக் கொண்டார்.

2005 இல் மஹிந்த ஜனாதிபதியான போது ஜி.எல். மீண்டும் மகிந்தவிடம் சென்றாலும் , அன்று  அமெரிக்காவையும் மேற்குலகையும் எதிர்க்கும் மனோநிலை கொண்டவராக மஹிந்த இருந்தார் .

இதன் காரணமாக மஹிந்தவின் சர்வதேச உறவுகளுக்கு ஜி.எல். பீரிசால் உதவ முடியவில்லை.

சமீபத்தில், எஸ்.பி.திசாநாயக்க பேசும் போது , அமெரிக்காவும் , சர்வதேச நாணய நிதியமும் மொட்டு கட்சியினரை நெருங்காததால் , இன்றைய  நெருக்கடியில் இருந்து மீள அவர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. எனவே  ரணிலை , ராஜபக்சவினர் ஜனாதிபதியாக்கினார்கள் என்றார்.

அமெரிக்க , சர்வதேச ஆதரவை வெல்லக்கூடிய தகுதி வாய்ந்த மனிதர் மொட்டு கட்சிக்குள்ளேயே இருக்கிறார் என்பது எஸ்.பி. திசாநாயக்கவுக்கு நன்கு தெரியும்

அவர் தான் மொட்டுவின் தலைவர் ஜி.எல் என்பதும் எஸ்.பிக்கு. தெரியும்.

ஆனால் ராஜபக்சவின் கோபத்துக்கு ஆளாக முடியாது என்பதால், எஸ்.பி , ஜி.எல்லை மறைத்து ரணிலை உயர்த்தி பேசினார்.

‘கோட்டா , ஜி.எல்.யை ஜனாதிபதியாக்கியிருந்தால் என்ன நடந்திருக்கும்…?’

கோட்டா , ஜி.எல். பீரிசை ஜனாதிபதியாக்கியிருந்தால் இன்று மொட்டு அரசாங்கம் ஒன்று அமைந்திருக்கும்.

மொட்டு அமைச்சர்கள்  இருந்திருப்பர்.

மொட்டுவின் இராஜாங்க அமைச்சர்கள் குழுவொன்றும் இருந்திருக்கும்.

இந்த பொருளாதார நெருக்கடியை தீர்க்கும் தகுதி வாய்ந்த மனிதருக்கு ஜனாதிபதி பதவியை வழங்காமல் , ராஜபக்ஷ குடும்பம் யானை வாலை பிடித்து வைகுண்டம் பார்க்க நினைத்தன் விளைவாக , மொட்டு யானை போன்ற பெரியதொரு பிரச்சனையில் சிக்கித் தவிக்கிறது.

இதை ஜி.எல். போலவே டலஸுக்கும் நன்றாகத் தெரியும்.

இலங்கை முழுவதும் மஹிந்தவின் பிம்பத்தை உருவாக்கியவர் டலஸ்தான் என்றால் பலருக்கு வியப்பாக இருக்கும். உண்மை அதுதான். வித்தியாசமான பரப்புரைதான்.

2004ஆம் ஆண்டு மஹிந்த பிரதமராக பதவியேற்ற போது ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்தோரைத் தவிர பெரும்பாலான பாமர மக்களுக்கு மஹிந்த யார் என்று கூடத் தெரியாது.

மகிந்தவின் மீசை , மகிந்தவின் குரஹன் (குரக்கன் நிற சால்வை) சால்வை ஊடாக மகிந்தவை கிராமத்து சிங்கள பௌத்த தலைவர் எனும் பிம்பத்தை உருவாக்கி பரப்புரை வழியாக சிங்கள தலைவர் எனும் இடத்தை பெற்றுக் கொடுத்தவர் டலஸ்.

டலஸ் மற்றும் ஜி.எல். என்போர் இலங்கை அரசியல் தலைவர்களை உருவாக்கிய இரண்டு அற்புதமான சிற்பிகள் எனலாம்.

Chandrika Kumaratunga

1994 பொதுத் தேர்தலில் சந்திரிகாவின் சர்வதேசப் பிம்பத்தை ஒருபுறம் ஜி.எல் உருவாக்கிய போது , மறுபுறம் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடும் ஒரு விதவைப் பெண்ணாக டலஸ் சந்திரிகாவை மக்கள் மனதில் பதியவைத்தார்.

ஜே.வி.பி.யால் கவரப்பட்ட இளைஞர்களுக்கு பண்டாரநாயக்க குடும்பத்தை கண்ணுக்கு காட்ட முடியாவிட்டாலும், தென் மாகாண சபைத் தேர்தலில் ஜே.வி.பியினரை சந்திரிக்காவை நோக்கி ஈர்க்க வைத்து , ஜே.வி.பியினரிடையே சந்திரிகாவை பிரபலமடைய வைத்தவர் டலஸ் .

2001ல் சந்திரிகா ஜி.எல். – டலஸ் இருவரையும் ஒதுக்கும் விதத்தில்  நடந்து கொண்டார் . அதனால் மனமுடைந்த இருவரும் சந்திரிகாவை விட்டு வெளியேறினர்.

ஜி.எல். ஐ.தே.க.வுக்குச் சென்றாலும் கூட , டலஸ் ஐ.தே.க.வுக்குச் செல்லவில்லை.

2001ல் சந்திரிகாவின் அரசியல் முடிவு அன்றிலிருந்து ஆரம்பமானது.

பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு டலஸ் புதிய தலைவர் ஒருவரை உருவாக்கினார்.

அவர்தான் மஹிந்த.

பின்னர் மகிந்தவுடன் ஜி.எல். இணைந்தார்.

பசில், ஜி.எல் மற்றும் டலஸ் ஆகியோருடன் இணைந்து பொதுஜன பெரமுனவை உருவாக்கினார்.

ஜி.எல் செய்த தியாகங்களை நினைத்தே பசில் , ஜி.எல்.ஐ மொட்டு கட்சி தலைவராக்கினார்.

2019ல் புதிய வாக்காளர்களான இளையோரது வாக்குகளால்தான் ஜனாதிபதித் தேர்தலில் கோட்டா வெற்றி பெற்றார்.

படித்த புத்திஜீவிகளை களத்தில் இறக்கி வியத்மக எனும் அமைப்பு வழியாக , வெற்றிக்கான வாக்குகளை கோட்டா பெற்றார்.

சரித ஹேரத்தும், சன்ன ஜயசுமன அபோன்றோர் வியத்மக மூலம் அரசியலுக்கு வந்தவர்கள்.

இன்று அவர்களும் , டலஸ் மற்றும் ஜி.எல். உடன் இணைந்துள்ளனர்.

மொட்டு கட்சியில் இருந்தோரில் , கைகளில் சேறு படாத – ரத்தம் தோயாத கதாபாத்திரங்கள் அனைவரும் , இன்று ஜி.எல்., டலஸ் உடன் இருக்கிறார்கள்.

2001ஆம் ஆண்டு சந்திரிக்கா ஜேவிபியுடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழித்தபோது சந்திரிகாவிடம் இருந்து இவர்கள் பிரிந்து சென்றார்கள்.

இன்று ராஜபக்ச குடும்பம் ,  ரணிலுடன் இணைந்து மொட்டு கட்சியை அழிக்கும் போது, ​​ராஜபக்ச குடும்பத்தில் இருந்து பிரிந்து மொட்டு கட்சியில் இருந்த சிலருடன் இணைந்து புதிய பயணத்தை ஆரம்பிக்க தயாராகி உள்ளனர்.

ரணிலுடன் இணைந்து ராஜபக்ச குடும்பம் மொட்டின் முதுகு தண்டை சிதைத்துக் கொண்டுள்ள சமயத்தில் , அதை நிமிர்த்த புதிய பயணமொன்றை இவர்கள் ஆரம்பித்துள்ளனர்.

டலஸ் மற்றும் ஜி.எல்.  ஆகியோர் 2001 அக்டோபரில் ஒரு புதிய பயணத்தை தொடங்கியிருந்தார்கள்.

இன்று, டலஸ் மற்றும் ஜி.எல். மீண்டும் அதே போன்ற இன்னுமொரு அக்டோபர் 2022 இல் மற்றுமோர் புதிய பயணத்தை தொடங்கியுள்ளனர்.

அக்டோபர் என்பது புரட்சிக்கான மாதம். அது ரஷ்யப் புரட்சியை நினைவுபடுத்துகிறது.

‘2001ல் சந்திரகா பண்டாரநாயக்காவின் அரசியல் முடிவுற்றது போல் , 2022ல் புரட்சி ராஜபக்ச -ரணில் கூட்டணி முடிவுக்கு வருமா?’

அதை இப்போதே சொல்லத் தெரியவில்லை.

ஆனால், 2015ல் ரணிலுக்கு ஆட்சி அதிகாரத்தை பெற்றுக் கொடுத்த மைத்திரிபாலவுக்கு எதிராக உருவான  ‘மஹிந்த சுலங்க’ (மகிந்த காற்று) போல , இன்று ரணிலுக்கு அதிபர் பதவியை பெற்றுக் கொடுத்த ராஜபக்சவினருக்கு எதிராக ‘டலஸ்-ஜி.எல். சுலஙக’ (‘டலஸ்-ஜி.எல். காற்று) அடித்து , யானையின் வாலில் தொங்கி வைகுண்டம் பார்க்க சென்ற கிராமத்தவனுக்கு நடந்த அனுபவம் போல ஒன்று வருமோ என , ராஜபக்ச குடும்பத்தினரின் நினைவுக்கு வந்தால் போதும்.

– உபுல் ஜோசப் பெர்னாண்டோ
தமிழில்: ஜீவன்

Leave A Reply

Your email address will not be published.