கோட்டாவைக் கைது செய்யுமாறு எவரும் கோர முடியாது! – பிரசன்ன கூறுகின்றார்.

“முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பியமைக்கு எதிராக எவரும் குரல் எழுப்ப முடியாது. அவரைக் கைது செய்யுமாறும் எவரும் அழுத்தம் கொடுக்கவும் முடியாது.”

இவ்வாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி பதவியிலிருந்து விலகி வீடு செல்லுமாறே ஆர்ப்பாட்டக்காரர்கள் அன்று கோரினர். அவரை நாட்டைவிட்டு வெளியேறுமாறோ அல்லது வெளிநாட்டில் தங்குமாறோ எவரும் கோரவில்லை.

அவருக்கென சொந்த நாடு இருக்கும்போது அவர் ஏன் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும்? எமது கோரிக்கையின் பிரகாரம் அவர் நாடு திரும்பியுள்ளார்.

அவருக்கு முன்னாள் ஜனாதிபதிக்குரிய அனைத்துச் சலுகைகளையும் எமது அரசு வழங்குகின்றது. அவர் இந்நாட்டில் சுதந்திரமாக நடமாட முடியும். போதிய பாதுகாப்பு வசதிகளையும் அவருக்கு அரசு வழங்கும்.

மீண்டும் அரசியலுக்கு வர அவர் இணக்கம் தெரிவித்தால் அவரை முதலில் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக்குவோம்.

மக்களின் அமோக ஆணை பெற்று ஜனாதிபதியாகப் பதவி வகித்த கோட்டாபய ராஜபக்சவை அரசு என்ற ரீதியில் நாம் ஒருபோதும் கைவிடமாட்டோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.