இரண்டாவது போராட்டத்தை ஆரம்பிப்போம்! – ரணில் அழைப்பு (photos)

“இளைஞர்கள் மாற்றத்தைக் கோரி முதலாவது போராட்டத்தை ஆரம்பித்தனர். அந்தப் போராட்டம் முடிந்துவிட்ட நிலையில், நாட்டைக் கட்டியெழுப்பும் இரண்டாவது போராட்டத்தை இங்கிருந்து ஆரம்பிப்போம்.”

– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் 76ஆவது ஆண்டு விழாவில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது:-

“அடுத்த 25 வருடங்களில் கடனற்ற சக்திவாய்ந்த இலங்கையை உருவாக்குவதற்கு வலுவான கொள்கை கட்டமைப்பின் ஊடாகச் செயற்பட வேண்டும்.

இந்த வேலைத்திட்டம் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மாறாத பலமான கொள்கை கட்டமைப்பாக செயற்படுத்தப்பட வேண்டும்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாக புதிய சட்டம் ஒன்றைக் கொண்டுவர எதிர்பார்த்துள்ளேன். அத்துடன், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு ஒன்றை உருவாக்கப் புதிதாக சட்டம் தயாரிக்கவும் உத்தேசித்திருக்கின்றேன்.

மக்கள் தற்போதைய அரசியல் கலாசாரத்தை வெறுக்கின்றனர். நாட்டின் எதிரணி விமர்சனங்களுக்கு மாத்திரம் மட்டுப்பட்டுள்ளது. அதேவேளை, இளைஞர்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். சில தவறுகளால் பெரும் நன்மை இழக்கப்பட்டது.

அரசமைப்பின் 22 ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதனை நிறைவேற்ற வேண்டும்.

அரசமைப்பில் மேலும் திருத்தம் செய்யப்பட வேண்டும். தேசிய சபையொன்றையும் உருவாக்க வேண்டும். கட்சித் தலைவர்கள் உள்ளடங்கும் வகையில் இந்தச் சபை அமைய வேண்டும்.

இலங்கை என்ற நாடு சிங்களம், தமிழ், முஸ்லிம் என அனைத்து இன மக்களுக்கும் சொந்தமானது. நாம் ஒவ்வொரு நாளும் பிச்சையெடுத்துக் கொண்டும், கடன் எடுத்துக் கொண்டும் இருக்க முடியாது.

சிங்களம், தமிழ், முஸ்லிம் என்று யாராக இருந்தாலும் யாரும் வங்குரோத்து அடைய விரும்புவதில்லை. எனவே, கடன் பெறாத பொருளாதாரம் ஒன்றை உருவாக்க ஒன்றுபடுவோம்.

இந்தப் பணியில் அனைத்துத் தரப்பினரையும் பேதமின்றி இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றேன்.

சக்தி வாய்ந்த நாட்டைக் கட்டியெழுப்பும் தேவை, எமது சொந்த நலனுக்கு அன்றி, அடுத்த தலைமுறைக்காகவே கட்டியெழுப்ப வேண்டும்” – என்றார்.

‘ஒன்றாக நாட்டைக் கட்டியெழுப்புவோம்’ என்ற தொனிப் பொருளில் இவ்வருட மாநாட்டை ஐக்கிய தேசியக் கட்சி நடத்தியது.

28 வருடங்களின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி, அரச தலைமைத்துவத்துடன் தனது ஆண்டு நிறைவு விழாவை நடத்தியது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் நடத்தப்படும், கட்சியின் முதலாவது விழா இது என்பதும் விசேட அம்சமாகும்.

நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரையும் ஒன்றிணைக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் மற்றும் வகிக்காத அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆண்டு விழாவில் கலந்துகொண்டனர்.

ஈ.பி.டி.பியின் தலைவரும் மீன்பிடி நீரியல் வள அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன், தேசிய முஸ்லிம் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்குமார், தேசிய காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த விழாவில் பங்கேற்றிருந்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டு அமைச்சுப் பதவிகளை வகிக்கும் காணி, சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, தொழில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோரும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆண்டு விழாவில் கலந்துகொண்டனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்க பண்டார, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, தேசிய அமைப்பாளரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்க, உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம், முன்னாள் அமைச்சர்களான ஜோன் அமரதுங்க, ரவி கருணாநாயக்க, நவீன் திசாநாயக்க, தயா கமகே, டி.எம்.சுவாமிநாதன், கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் அனைத்து மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சுகததாச விளையாட்டரங்குக்கு வருகை தந்திருந்த அனைத்து இன மக்களாலும் அரங்கம் நிறைந்திருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவின் வருகையுடன் ஆண்டு நிறைவு விழா ஆரம்பிக்கப்பட்டதுடன், கட்சியின் ஆரம்பகர்த்தா, தேசபிதா டி.எஸ்.சேனாநாயக்க மற்றும் ஏனைய தலைவர்களின் உருவச்சிலைகளுக்கு மலர் மாலை அணிவித்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஸ்தாபகர் டி.எஸ்.சேனாநாயக்கவின் உருவச்சிலைக்குக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மலர் மாலை அணிவித்தார். டட்லி சேனாநாயக்கவின் உருவச் சிலைக்குக் கட்சியின் பிரதித் தலைவருமான ருவன் விஜேவர்தனவும், சேர் ஜோன் கொத்தலாவலவின் உருவச்சிலைக்கு கட்சியின் உப தலைவர் சட்டத்தரணி அகிலவிராஜ் காரியவசமும், ஜே.ஆர்.ஜயவர்தனவின் உருவச் சிலைக்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்க பண்டாரவும், ஆர்.பிரேமதாஸவின் உருவச்சிலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தனவும், டி.பி. விஜேதுங்கவின் உருவச் சிலைக்கு ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் முன்னாள் அமைச்சருமான சாகல ரத்நாயக்கவும் மலர் மாலை அணிவித்தனர்.

தேசிய ஒருமைப்பாட்டின் பெறுமையை வெளிப்படுத்தும் வகையில், தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன், கட்சியின் பெருமையை வெளிப்படுத்தும் காணொளிகளும் காட்சிப்படுத்தப்பட்டன. ஆண்டு விழாவையொட்டி உள்நாட்டு கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வாத்திய இசை நிகழ்ச்சிகளும் விழாவை அலங்கரித்தன.

Leave A Reply

Your email address will not be published.