ஜெனிவா சென்றடைந்த தமிழ் அரசியல்வாதிகள்! – நீதி கோரி நாளை ஆர்ப்பாட்டம்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 51ஆவது கூட்டத் தொடர் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில், அங்கு நடைபெறவுள்ள பக்க அமர்வுகளில் கலந்துகொள்வதற்காக இலங்கையில் இருந்து நான்கு தமிழ் அரசியல்வாதிகள் ஜெனிவா சென்றடைந்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே. கோடீஸ்வரன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அனந்தி சசிதரன், மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தியாகராஜா சரவணபவன் மற்றும் மாணவர் மீட்புப் பேரவையின் தலைவரும் சமூகச் செயற்பாட்டாளருமான செல்வராஜா கணேஷ் ஆகியோரே ஜெனிவா சென்றடைந்தனர்.

இது தொடர்பில் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

“தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த மனித உரிமை மீறல்கள், இன அழிப்பு, அதற்குச் சமாந்தரமாக இடம்பெற்ற படுகொலைகள், இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் அநீதி, பாரபட்சம், புறக்கணிப்பு பற்றி நாங்கள் பல தடவைகள் கூறியிருந்தோம். அதற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்.

இந்த நியாயமான கோரிக்கையை ஏலவே முன்வைத்து நீதி கேட்டு இருந்தோம். இதுவரைக்கும் அந்த நீதி தமிழ் மக்களுக்குக் கிடைக்கவில்லை.

அதற்காக இம்முறை நீதி கோரி ஐ.நா. மனித உரிமைகள் சபையின் மாநாட்டு மண்டபத்துக்கு முன்பாக நாளை அனைவரும் கூடி கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்.

அதேவேளை, பக்க அமர்வுகளில் கலந்துகொண்டு தமிழருக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும், படுகொலைகளுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று ஒருமித்த குரலில் வலியுறுத்தவுள்ளோம்.

உலகத் தமிழர்கள் ஒன்று கூடுகின்ற ஜெனிவாக் களத்தை இம்முறை மேலும் பலமாக்கி எமது உரிமைகளை வென்றெடுக்கவே நாங்கள் இங்கு வருகை தந்திருக்கின்றோம்” – என்றனர்.

Leave A Reply

Your email address will not be published.