உஸ்பெகிஸ்தான் மாநாட்டில் மோடி- ஜி ஜின் பிங்: இந்தியா- சீனா பேச்சுவார்த்தை நடைபெறுமா?

மத்திய ஆசிய நாடான உஸ்பெகிஸ்தானில் வரும் 15, 16-ம் தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார். உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ் அழைப்பை ஏற்று இதில் பங்கேற்க பிரதமர் மோடி அங்கு செல்கிறார். வரும் 14ம் தேதி புறப்படும் மோடி, 16ல் இந்தியா திரும்புகிறார்.

இந்தக் கூட்டத்தில், அமைப்பின் உறுப்பினர்களாக உள்ள நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்த அமைப்பில் சீனா, இந்தியா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. எதிர்கால திட்டங்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.

இந்தப் பயணத்தின்போது, மற்ற நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து, இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஷாங்காய் மாநாட்டின்போது பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின் பிங்கும் இரண்டு நிகழ்வுகளில் ஓரே அறையில் சந்திக்கும் சூழல் உள்ளது. ஆனால், இரு தரப்புக்கு இடையிலான பேச்சுவார்த்தைக்கு திட்டமிடப்படவில்லை.

2019-ம் சீன அதிபர் ஜி ஜின் பிங்கின் இந்திய வருகை, சீனா, இந்தியா இடையே நட்புறவை வளர்க்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மாறாக அதன்பிறகு, இந்தியாவில் எல்லைப் பகுதியில் சீனாவின் ராணுவம் ஊடுறுவியது. அதனால், லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா, சீனா இடையே போர் ஏற்படும் சூழலும் ஏற்பட்டது.

இருநாட்டு தரப்பின் ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இருப்பினும், நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை. இந்தநிலையில், ஷாங்காய் மாநாட்டில் ஜின் பிங், மோடியிடையே பேச்சுவார்த்தை நடைபெறுமா என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே தகவல்கள் வந்துள்ளன.

Leave A Reply

Your email address will not be published.