கடந்த 6 ஆண்டுகளில் 11 தற்கொலைகள்..! சென்னை ஐஐடியில் என்ன நடக்கிறது..?

சென்னை ஐஐடி விடுதியில் விண்வெளி பொறியியல் துறையில் 4ம் ஆண்டு படித்து வந்த ஒடிசாவை சேர்ந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அளவில் முன்னணியில் உள்ள சென்னை ஐஐடி வளாகத்தில் தொடர்ந்து தற்கொலை சம்பவம் அதிகரித்து வருகிறது. ஐஐடி வளாகத்தில் நடைபெறும் தற்கொலைகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. வளாகத்தில் சாதி ரீதியான பாகுபாடு பார்க்கப்படுவதாக மற்றொரு பக்கம் குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகின்றன.

2016 தொடங்கி தற்போது வரை சென்னை ஐஐடி வளாகத்தில் 11 தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. சென்னை ஐஐடியில் கடந்தாண்டு பாதி நிலையில் எரிந்த மாணவருடைய சடலம் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் கேரளாவை சேர்ந்த மாணவர் உன்னிகிருஷ்ணன் என்பவர் தற்கொலை செய்துகொண்டார் என்பது தெரியவந்தது. பின்னர் விசாரணையில் தற்கொலை கடிதமும் சிக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2018-ல் கேரளாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். வருகைப் பதிவேட்டில் பற்றாக்குறை காரணமாக, அவர் தற்கொலை செய்துகொண்டார் எனக் கூறப்பட்டது. இதுதவிர ஆய்வு மாணவர் ஒருவரும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த முதுகலைத் தொழில்நுட்ப மாணவர் ஒருவரும் தற்கொலை செய்துகொண்டனர், மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டார்கள் என்பது காரணமாகக் கூறப்பட்டது . இது தவிர 2018-ல் தனிப்பட்ட காரணங்களுக்காகப் பேராசிரியர் ஒருவரும் தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து கடந்த 2019ஆம் ஆண்டு கேரளாவை சேர்ந்த மாணவி பாத்திமா லத்திப் பின் மரணமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நேற்று சென்னை ஐஐடியில் மாணவர் விடுதியில் தங்கி, விண்வெளி பொறியியல் துறையில் 4ம் ஆண்டு படித்து வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுப்ரன்சூ சேகர்திவாரி (21), வகுப்பு முடிந்து விடுதிக்கு வந்த அவர் உணவு சாப்பிடுவதற்கு அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சக மாணவர்கள் அவர் அறைக்கு சென்று பார்த்தபோது தூக்கில் பிணமாக தொங்கியது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் விடுதி காப்பாளர் மற்றும் நிர்வாகத்திற்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அவர்கள் கோட்டூர்புரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சென்னை ஐஐடி வளாகத்தில் 11 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. மேலும் கடந்த 2016 ஆம் ஆண்டு மட்டும் ஐஐடி வளாகத்தில் ஒரே ஆண்டில் நான்கு பேரில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தொடர்ச்சியாக இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனமாக திகழும் சென்னை ஐஐ டியில் தற்கொலைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐஐடியில் படித்து முடித்தவுடன் நல்ல வேலை கைநிறைய சம்பளம் என மாணவர்களின் வாழ்க்கைத் தரம் மேல் நோக்கி சென்றாலும் படிக்கின்ற காலத்தில் ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் பல்வேறு மனரீதியான சிக்கல்களை ஐஐடி வளாகத்திலேயே சந்திக்க நேரிடுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வருகின்றன.

ஐஐடி வளாகத்தில் மாணவர்களுக்கிடையே பாகுபாடு நிலவுவதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்படுவதையும் மாணவர்களின் தற்கொலைகள் அரங்கேறுவதையும் சாதாரணமாக கடந்து செல்ல முடியாத நிகழ்வாக உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.