ஐ.நா. பிரேரணை வரைவு குறித்து விக்கி, செல்வம், கஜன் அதிருப்தி!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் பிரிட்டன் தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்டிருக்கும் புதிய பிரேரணையின் உள்ளடக்கம் தொடர்பில் பெருமளவுக்குத் திருப்தியடைய முடியாது எனவும், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு வலியுறுத்தப்படாமை முக்கிய குறைபாடு எனவும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஊடகங்களிடம் விசனம் வெளியிட்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான நிலையில், அதற்கு முன்னதாகவே இம்முறை இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வலியுறுத்த வேண்டும் எனவும், அதற்கேற்றவாறான மிகவும் வலுவான பிரேரணையொன்றை பிரிட்டன் தலைமையிலான இணை அனுசரணை நாடுகள் கொண்டுவர வேண்டும் எனவும் பெரும்பாலான தமிழ்க் கட்சிகள் வலியுறுத்தியிருந்தன.

இணை அனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்டுள்ள புதிய பிரேரணை வரைவு சில தினங்களுக்கு முன்னர் வெளியாகியுள்ள நிலையில், அதன் உள்ளடக்கம் திருப்தியளிக்கும் வகையில் அமைந்துள்ளதா என்று வினவியபோது அதற்குத் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

சி.வி.விக்னேஸ்வரன்

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் கூறுகையில்,

“பிரேரணையில் நாம் எதிர்பார்த்ததை விடக் குறைந்தளவிலான விடயங்களே உள்ளடக்கப்பட்டுள்ளன. மிக முக்கியமாக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு வலியுறுத்தப்படும் என்று எதிர்பார்த்த போதிலும், அவ்விடயம் உள்ளடக்கப்படவில்லை.

அதேபோன்று அரசியல் காரணங்களுக்காகவும் வெறுமனே வாக்குமூலங்களின் அடிப்படையிலும் நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தப்படும் என்றும், பயங்கரவாத் தடைச் சட்டம், காணி அபகரிப்பு மற்றும் இராணுவமயமாக்கல் ஆகிய விடயங்கள் தொடர்பில் வலுவான கருத்துக்கள் முன்வைக்கப்படும் என்றும் எதிர்பார்த்தோம். இருப்பினும் அத்தகைய கருத்துக்கள் உள்ளடக்கப்படவில்லை.

இப்பிரேரணையில் பல்வேறு விடயங்கள் எமக்குச் சார்பானவையாக அமையாத போதிலும், கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் புதிதாகக் கொண்டுவரப்படும் ஒவ்வொரு பிரேரணைகளும் சற்று முன்னேற்றகரமானவையாகவே காணப்படுகின்றன.

எனவே, இலங்கை தொடர்பில் எதிர்வரும் காலங்களில் கொண்டுவரப்படக்கூடிய பிரேரணைகள் மேலும் காத்திரமான விடயங்களை உள்ளடக்கிய வலுவான பிரேரணைகளாக அமையவேண்டியது அவசியமாகும்” – என்று வலியுறுத்தினார்.

செல்வம் அடைக்கலநாதன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ளடங்கும் ரெலோவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் கூறுகையில்,

“இப்பிரேரணையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் உள்ளிட்ட சில விடயங்களில் நாம் எதிர்பார்த்ததைப் போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இருப்பினும் அவற்றை அரசு உரியவாறு நடைமுறைப்படுத்துமா என்பதும் அல்லது இப்பிரேரணையில் உள்ள விடயங்களை அரசு தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளுமா என்பதும் சந்தேகத்துக்குரிய விடயமாகவே காணப்படுகின்றது.

எமது மக்கள் நீதியைப்பெற்றுக்கொள்ளும் விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின் மீதே நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள். எனவே, அதற்கேற்றவாறு இணை அனுசரணை நாடுகள் செயற்படவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

குறிப்பாக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையும் ஏனைய உறுப்புநாடுகளும் வலியுறுத்தவேண்டியது அவசியமாகும்” – என்று தெரிவித்தார்.

செல்வராசா கஜேந்திரன்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் கூறுகையில், “இணை அனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்டிருக்கும் புதிய பிரேரணையின் உள்ளடக்கம் குறித்துத் எம்மால் திருப்தியடைய முடியாது” – என்று தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.