தனி நபர் சுதந்திரத்துக்கு எதிரான குற்ற விசாரணை அடையாளச் சட்டம்- மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

குற்ற வழக்குகளில் தண்டிக்கப்படுபவர்கள் மற்றும் கைது செய்யப்பட்டவர்களின் அங்க அடையாளங்களை சேகரிக்க வகை செய்யும் குற்ற விசாரணை அடையாள சட்டப் பிரிவுகளை எதிர்த்த வழக்கில், ஆறு வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்கள், கைது செய்யப்பட்டவர்கள், தடுப்பு காவலில் வைக்கப்படுபவர்களின் கை ரேகை பதிவுகள், கருவிழி மற்றும் விழித்திரை பதிவுகள், உடல் மற்றும் உயிரியல் மாதிரிகளை சேகரிக்கவும், சேமித்து வைக்கவும் காவல்துறை மற்றும் சிறை அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கும் வகையில் குற்ற விசாரணை அடையாளச் சட்டம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

குடியரசு தலைவரின் ஒப்புதலைப் பெற்றுள்ள இச்சட்டம், 2022ம் ஆண்டும் ஏப்ரல் 18ம் தேதி அரசிதழில் வெளியிட்டு அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தில், தனிமனித சுதந்திரத்தை, உரிமையை பறிக்கும் வகையில் உள்ள பிரிவுகளை ரத்து செய்யக் கோரி சென்னையைச் சேர்ந்த ஆதர்ஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், மக்கள் நல அரசான இந்திய அரசு, தண்டனை விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில் எந்த சட்டமும் இயற்ற முடியாது எனவும், அதிகாரிகளுக்கு கட்டுப்பாடற்ற அதிகாரம் வழங்கும் இந்த சட்டப் பிரிவுகள் ரத்து செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள், தண்டிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை பதிவு செய்வதை கட்டாயப்படுத்தும் இந்த சட்டப் பிரிவுகள் தன்னிச்சையானவை என்றும், கைது செய்யப்பட்டவர்களின் அங்க அடையாளங்களை சேகரிக்க மேஜிஸ்ட்ரேட் பிறப்பிக்கும் உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வழிவகை செய்யாதது சட்ட விரோதமானது என்றும் இயற்கை நீதிக்கு முரணானது எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் அமர்வு, ஆறு வாரங்களில் மனுவுக்கு பதிலளிக்கும் படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

Leave A Reply

Your email address will not be published.