யாழ். விமான நிலையத்துக்குச் சேவையை நடத்த இந்தியா ஆர்வம் காட்டவில்லை!

“யாழ்ப்பாணம் (பலாலி) சர்வதேச விமான நிலையத்துக்குச் சேவையை நடத்த விரும்பும் இந்திய விமானங்களுக்கு
அரசு சலுகைகளை வழங்குகின்றது. ஆனால், சேவையை வழங்க இந்திய விமான நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை” என்று சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

இந்திய நிறுவனங்களுடன் இது தொடர்பில் பலமுறை பேச்சுக்கள் நடத்தப்பட்டபோதும் அது பலனளிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் இந்திய விமானங்களுக்கு சலுகைகளை – அதாவது ஏனைய விமான நிலையங்களில் வழங்கப்படுவது போன்று வரிச் சலுகையை வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடானளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் சபையில் நேற்று அமைச்சரைக் கோரினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், “இந்திய விமான நிறுவனம் ஒன்றாவது யாழ்ப்பாணத்துக்கு விமானங்களை இயக்க முன்வந்தால் கோரிக்கையை பரிசீலிக்க அரசு தயாராக இருக்கின்றது. மேலும், யாழ்ப்பாணம் விமான நிலையத்தை அரசு பெருமளவு செலவு செய்து புனரமைத்ததுடன் ஊழியர்களுக்கும் சம்பளத்தையும் வழங்கி வருகின்றது. ஆனால், யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கு சேவைகளை வழங்க சர்வதேச நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை” – என்றார்.

பலாலி விமான நிலையம் இந்தியாவின் ஆதரவுடன் புனரமைக்கப்பட்டு கடந்த 2019 நவம்பர் 11ஆம் திகதி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாகத் திறந்து வைக்கப்பட்டது. கொரோனாத் தொற்றுப் பரவலைத்
தொடர்ந்து 2020 மார்ச் 15 முதல் சேவைகள் இடைநிறுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.