நாட்டின் கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்தை வலுப்படுத்த வேண்டும் : ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற ஆளுநர் ரவி, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய ஆளுநர் ரவி, நம் நாடு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போல் இப்போது இல்லை. நிறைய வளர்ச்சி அடைந்துள்ளது. பிரதமர் மோடியின் குறிக்கோளுடன் தைரியமான இலக்குடன் வளர்ந்து வருகிறது.

நமது நாடு சுகாதாரம், ஆய்வுகள், மின்னணுவியல், விண்வெளி அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றில் தெளிவான இலக்கு மற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் முன்னேறியுள்ளது. உலகநாடுகள் நம் நாட்டை இப்போது குறைவாக எடுத்துக் கொள்ளவதில்லை. அவர்களது பல முடிவுகளுக்கு முன் இந்தியாவின் முடிவுகளை பார்க்கிறார்கள். உலகம் முழுவதும் கொரோனா தொற்று அசாதாரண சூழலில் பாதிக்கப்பட்டு தவித்த போது, நம் நாட்டில் தடுப்பூசி கண்டுப் பிடிக்கப்பட்டது.

அரசின் தொடர் முயற்சியினால் கொரோனா அசாதாரண சூழலில் இருந்து மீண்டு வர முடிந்தது. நம் நாட்டில் ஏராளமான மாநிலங்கள் உள்ளன அதில் ஏராளமான வேற்றுமைகள் உள்ளன. ஆனால் இன்று நாட்டில் உள்ள அனைவரையும் ஒரே குடும்பமாக பார்க்கின்றனர். பொருளாதாரம், தொழில்நுட்பம் போல நம் நாட்டின் கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்தை வலுப்படுத்த வேண்டும், அது எல்லாவற்றையும் விட முக்கியமானது என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஆளுநர் ரவி, படித்து முடித்த உடனே எங்காவது வேலைக்கு சேர்ந்தால் போதும் என்று தேடுவதை விடுத்து, இலக்கை பெரிதாக யோசிக்க வேண்டும். பெரிதாக கனவு காணவேண்டும். தோல்விகளை கண்டு கலங்காமல், அதிலிருந்து கற்க வேண்டும். உங்களில் உள்ள ஒவ்வொரு வளர்ச்சியிலும் இந்தியாவும் சேர்ந்தே வளர்ச்சியடையும் என்பதை நினைவில் கொள்க என மாணவர்களுக்கு அறிவுறைகள் வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.